தாமரைக் கோபுரத்தைக் காட்டி மஹிந்தவின் ஆட்சியில் 200 கோடி ரூபா மோசடி! – திறப்பு விழாவில் போட்டுடைத்தார் மைத்திரி

“மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போது 2012ஆம் ஆண்டு தாமரைக் கோபுரத் திட்டத்துக்காக வழங்கப்பட்ட 200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்ற எந்தத் தகவலும் இல்லை. பணம் வழங்கப்பட்ட நிறுவனம் எங்கு சென்றது என்றும் தெரியவில்லை.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் அமைக்கப்பட்ட தாமரைக் கோபுரம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபுரத்தைத் திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் நிதி மோசடி மற்றும் ஊழல் என்ற தலைப்பில் ஜனாதிபதி உரையாற்றினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தத் தாமரைக் கோபுரக் கட்டுமானம் எமக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகவே நாம் கருதுகின்றோம். இது இலங்கையின் மிக முக்கியமான ஒரு சின்னமாக மாற்றமடைந்துள்ளது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய ரீதியாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் எமக்கு இது பெருமையைத் தேடித் தந்துள்ளது.

தாமரைக் கோபுரத்தின் கட்டுமானங்களுக்கு 7 ஆண்டுகள் தேவைப்பட்டன. 2012ஆம் ஆண்டுதான் இதற்கான அடிக்கல் நடப்பட்டது. அதற்கான நிதி சீனாவில் இருந்து எக்ஸிம் வங்கி ஊடாகக் கடன் உதவியாக வழங்கப்பட்டது. எமது அரசும் இதற்காக ஐந்து தரப்பினருடன் உடன்படிக்கையைச் செய்துகொண்டது. இந்தக் கட்டுமானம் தொடர்பாக இலங்கையர் என்ற ரீதியில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

2012ஆம் ஆண்டு இந்தக் கோபுரத்தின் அடித்தளத்தை அமைப்பதற்கு 200 கோடி ரூபா அலிப் என்ற சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் சிறிது காலத்தில் காணாமல் போய்விட்டது. அரசால் வழங்கப்பட்ட 200 கோடி ரூபாவும் எங்கு சென்றது என்று தெரியவில்லை. இது தொடர்பாக நாம் விசாரணை மேற்கொண்டோம். அந்த நிறுவனம் எங்கு சென்றது என்பது இதுவரை தெரியாதுள்ளது. அவ்வாறான ஒரு நிறுவனம் சீனாவில் இல்லை.

அதன்பின்னர் எமது மக்களின் பணத்தில் இந்தக் கோபுரத்தை அமைக்க நாம் தீர்மானித்தோம். இந்தக் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளை முழுமைப்படுத்த இன்னும் 300 கோடி ரூபா தேவைப்படுகின்றது.
எமது நாட்டின் தேசிய சொத்தான இதைப் பாதுகாக்க அரசு என்ற ரீதியில் நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *