அரச தலைவர் வேட்பாளரை ஐ.தே.க. அறிவித்த பின்பே முடிவு எடுப்போம்! – சஜித்திடம் கூட்டமைப்பு நேரில் எடுத்துரைப்பு

“ஐக்கிய தேசியக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் (ஜனாதிபதி வேட்பாளர்) யார் என்று கட்சியின் தலைமைப்பீடம் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்பே நாம் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை தமிழ் மக்களுடன் கூடி ஆராய்ந்து முடிவெடுப்போம்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் இன்று நேரில் எடுத்துரைத்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

யாழ். குடாநாட்டுக்கு இன்று விஜயம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, தனியார் ஹோட்டல் ஒன்றில் மதிய உணவு அருந்தும்போது அரச தலைவர் தேர்தல் (ஜனாதிபதித் தேர்தல்) தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய பேச்சு நடத்தினார். இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

யாழில் இன்று பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட அமைச்சர் சஜித், கோட்டைப் பகுதியில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசியக் கண்காட்சியையும் நேரில் பார்வையிட்டார். அதன்பின்னர் அவர், யாழ். நகரிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொழும்பிலிருந்து தன்னுடன் வருகை தந்தவர்கள் ஆகியோருக்கு மதிய விருந்தளித்தார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் மற்றும் யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் ஆகியோருடன் அமைச்சர் சஜித் பிரேமதாஸ அரச தலைவர் தேர்தல் தொடர்பில் பேச்சு நடத்தினார். இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்னவும் இதில் கலந்துகொண்டார்.

இந்தப் பேச்சின்போது கருத்துரைத்த அமைச்சர் சஜித்,

“இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளராக நான் களமிறங்குவதில் உறுதியாக உள்ளேன். இந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் நிச்சயம்.

ஜனாதிபதியாக நான் பதவியேற்ற முதல் ஆறு மாதங்ககளுக்குள் இனப்பிரச்சினையைத் தீர்ப்பேன். அதற்கு மேல் காலத்தை இழுத்தடித்தால் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் போய்விடும்.

ஒற்றையாட்சியைக் கடந்து வேறொரு வடிவத்தில் தீர்வு என்றால் சிங்கள மக்கள் குழப்பமடைந்து விடுவார்கள். சிங்கள மக்களைக் குழப்பமடைய வைத்து தீர்வொன்றை எட்ட முடியாது என்ற யதார்த்தத்தை நாம் புரியவேண்டும்” என்றார்.

“வார்த்தைகளில் கவனம் செலுத்தாமல் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தலாம். ஒற்றையாட்சி என்ற அரசமைப்புக்குள் சுயாட்சிக்குரிய அம்சங்களுடன் பல்வேறு நாடுகளில் அரசமைப்பு உள்ளது. வார்த்தைகளில் சிக்காமல் – வார்த்தைகளால் சமாளித்து – அதிகாரங்களைப் பகிர்ந்து அரசமைப்பை உருவாக்கலாம்” என்று இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

“சமஷ்டிக் கோரிக்கையுடன் தமிழ் மக்கள் நீண்ட காலமாகப் போராடியுள்ளனர் – போராடுகின்றனர். எனவே, அதற்குக் குறைந்த எந்தத் தீர்வையும் ஏற்க முடியாது. சமஷ்டியின் குணாம்சங்களும், அலகுகளும் தமிழர்களுக்கான தீர்வில் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். அதேவேளை, சிங்கள மக்களைக் குழப்பாமல் நுணுக்கமாகச் செயற்பட வேண்டும். ஆனால், அதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் யார் என்பதைத் தங்களின் தலைமைப்பீடம் தீர்மானித்துவிட்டதா? அரச தலைவர் வேட்பாளர் பற்றிய குழப்பம் ஐ.தே.கவுக்குள் நீடிக்கின்றது. யார் வேட்பாளர் என்ற குழப்பத்தால், மக்கள் இங்கு குழப்பமடைந்துள்ளனர். யார் வேட்பாளர் என்பதில் உடன்பாட்டுக்கு வந்துவிட்டீர்களா? நீங்கள் போட்டியிடுவது உண்மையா?” என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துருவித்துருவிக் கேட்டனர்.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சஜித்,

“நான் இம்முறை போட்டியிடாமல் விட்டுக்கொடுக்கலாம். எனக்கு அதில் ஆட்சேபனையில்லை. எனக்கு இன்னும் காலமிருக்கின்றது. ஆனால், என்னைத் தவிர்த்தால், கட்சிக்குள் வெற்றியடையக் கூடியவர்கள் யார் இருக்கின்றார்கள்? வேறு யார் போட்டியிட்டாலும் கட்சி தோல்வியடையும். கட்சி வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிட விரும்புகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் எனக்கு ஆதரவு வழங்கவேண்டும்” என்றார்.

“இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் பெரிய விடயம். அதனால் எப்படியான தீர்வை எட்டுவது என்ற கலந்துரையாடலை ஒரே சந்திப்பில் எட்ட முடியாது. பல்வேறு கருத்துக்களில் இருந்து, வடிவமொன்றைக் கண்டுபிடிப்போம். இது அதற்கான முதல் சந்திப்பாக இருக்கட்டும்” என்றும் அமைச்சர் சஜித் மேலும் கூறினார்.

“அதுதான் சரி. எனினும், முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் தலைமையுடன் இணைந்து நீங்கள் தீர்மானியுங்கள். அதன்பின்னர், அடுத்தகட்டப் பேச்சுக்களைத் தொடரலாம். ஐ.தே.கவின் அரச தலைவர் வேட்பாளர் (ஜனாதிபதி வேட்பாளர்) யார் என்று கட்சியின் தலைமைப்பீடம் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்பே நாம் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை தமிழ் மக்களுடன் கூடி ஆராய்ந்து முடிவெடுப்போம்” என்று இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *