புதிய அரசமைப்பு மிகவும் அவசியம்! – யாழ். மண்ணில் வைத்து மைத்திரி தெரிவிப்பு

* நாடாளுமன்றம் நிறைவேற்றத் தவறிவிட்டது
* வடக்கு மக்களை ஐ.தே.க. ஏமாற்றிவிட்டது
* இந்தப் பாவங்களுக்கு நான் பொறுப்பல்ல

“நாடு முன்னேறிச் செல்வதற்கும் கட்டியெழுப்புவதற்கும் புதிய அரசமைப்பு அவசியம். அதனை கடந்த நான்கு ஆண்டுகளில் நாடாளுமன்றம் நிறைவேற்றத் தவறிவிட்டது. வடக்கு மக்களை ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றிவிட்டது. தெற்கு மக்களை நாடு பிரிபடப் போகின்றது என்று சொல்லி அவர்களிடத்தில் வெறுப்புணர்வை வளரச் செய்துவிட்டார்கள். இந்தப் பாவங்களுக்கு நான் பொறுப்பல்ல.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான நிகழ்வு துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எனக்கு முன்னர் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எனது தேர்தல் கால வாக்குறுதிகள் பற்றிச் சொன்னார். இன்று காலையிலிருந்து எனது தேர்தல் வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றேன். துறைமுகத்துக்கான அடிக்கல் நடுவது தொடக்கம் சகல விடயங்களும் நான் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள்தான்.

காணி விடுவிப்புத் தொடர்பிலும் கூறினார். பாதுகாப்புத் தரப்பினர் ஆக்கிரமித்த 95 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இது தொடர்பில் பேசினேன். ஒரு மாதத்துக்குள் இந்தக் காணிப் பிரச்சினையைத் தீர்க்குமாறு முப்படைத் தளபதிகளும் பணித்துள்ளேன்.

எந்தவொரு அரச தலைவரும் செய்யாததை நான் செய்துள்ளேன். ஜனநாயகத்தை நாடு முழுவதுக்கும் வழங்கியுள்ளேன்.

யார் எந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசியல் காரணங்களுக்காக எவர் மீதும் துப்பாக்கிச்சூடுகளை மேற்கொள்ளாத ஒரே யுகம் எனது ஆட்சிக் காலம்தான். எதிர்காலத்திலும் அந்த சுதந்திரம், ஜனநாயகம், சமாதானம் மற்றும் சமத்துவத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

கடந்த காலங்களில் அரசியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருந்தன. வீடுகளை எரித்தார்கள்; ஊடக நிறுவனங்களை எரித்தார்கள்; ஊடகவியலாளர்களைக் கடத்தினார்கள். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதுவும் என் மீது சுமத்தப்படவில்லை.

கடந்த நான்கரை வருடகால ஆட்சியில் நான்கு வருடங்களாக பல கோடி ரூபா பணத்தை செலவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசமைப்பு வல்லுநர்கள் புதிய அரசமைப்பைத் தயாரிப்பதற்கும் கற்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் அதனூடாக நாட்டுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியினர் வடக்கு மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளனர். அதேவேளை, நாடு பிரிபடப் போகின்றது என்று தெற்கு வாழ் மக்களிடையே வெறுப்புணர்வை பரவச் செய்தனர். இந்தப் பாவ காரியத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நாட்டை முன்னேற்றுவதற்கு புதிய அரசமைப்புத் தேவைதான். நாங்களும் இணைந்து கொண்டு வந்த 19ஆவது அரசமைப்புத் திருத்தம் முற்றாக இல்லாமல் செய்யப்படவேண்டும். இந்தத் திருத்தத்தின் ஊடாக நாட்டில் மூன்று தலைவர்கள் இருக்கும் சூழல் காணப்படுகின்றது. நாட்டை ஒழுங்காக நிர்வகிக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியிடமிருந்து அதிகாரங்களைக் குறைத்தார்கள். பிரதமருக்கு அதிகாரங்களை அதிகரித்தார்கள். அதேபோன்று சபாநாயகருக்கும் அதிகாரங்களை வழங்கினார்கள். சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தார்கள். ஆனால், அவை சபாநாயகரின் கீழே இயங்குகின்றன. அதன் சுயாதீனத்தன்மை எப்படி இருக்கும்?

19ஆவது அரசமைப்புத் திருத்தத்தை ஒழிக்கும் பிரதமர் யார் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. நாடாளுமன்றத்தின் ஊடாகவே இது மாற்றப்பட வேண்டும். நாடாளுமன்றமே புதிய அரசமைப்பைக் கொண்டு வரவேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் வரப்போகின்றது. இந்த அரசு புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு காலம் உண்டு. அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து இதனைச் செய்யவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *