இறுதிக் காலத்திலாவது வாக்குறுதியை நிறைவேற்றுவார் ஜனாதிபதி மைத்திரி! – இன்னும் சிலர் நம்புகிறார்கள் என்று அவர் முன்பாகக் கூறினார் சுமந்திரன்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளில் எஞ்சிய வாக்குறுதிகளை, மீதமுள்ள பதவிக் காலத்தில் நிறைவேற்றுவார் என்று எங்களில் சிலர் இன்னமும் நம்புகின்றார்கள்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான நிகழ்வு துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுகின்றார் என்பது 2014ஆம் ஆண்டு சில மாதங்களுக்கு முன்னரே அவருக்குத் தெரியும். அவர் வேட்பாளராகக் களமிறக்கப்படுவதற்கான காரணிகளாக நாமும் இருந்தோம். அதுவும் அவருக்குத் தெரியும்.

அவர் ஏனையவர்களை விட வித்தியாசமான வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். தமிழ் பேசும் மக்கள் இதனால் 85 சதவீதமான வாக்குகளை அவருக்கு வழங்கினர். ஜனாதிபதியாக மைத்திரிபால தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். யாழ். மாவட்ட செயலகத்தில், நடந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கின்றது என்று கூறினார். அதற்குப் பதிலளித்த மைத்திரிபால, இணக்கப்பாடு இருக்கின்றது. அது எழுத்தில் அல்ல, இதயங்களுக்கு இடையில் எழுதப்பட்டிருக்கின்றது என்று கூறினார்.

அவருடன் நம்பிக்கையுடன் 4 ஆண்டுகள் பயணித்துள்ளோம். அவர் வழங்கிய வாக்குறுதிகளில் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்களிடம் இருக்கின்றது.

அவரது பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் கொஞ்சக் காலம் இருக்கின்றது. எஞ்சிய காலத்தில் ஏனைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று எங்களில் சிலர் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு அவரின் பதிலை எதிர்பார்க்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *