ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைச் சமர்! – ‘தேசிய மக்கள் சக்தி’யாக அநுர களத்தில்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடுவார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் தலைமையில் ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 28 அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புலமையாளர்கள் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் மாநாடு இன்று மாலை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.

இந்தப் மாநாட்டிலேயே, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடுவார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மாநாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த மாநாடு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய இரண்டு பிரதான அரசியல் கூட்டணிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த அநுரகுமார?

* முழுப் பெயர்:- திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க.

* பிறப்பு:- 1968.11.24.

* பிறந்த இடம்:- கலேவெல (நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார்)

*ஆரம்பக் கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம்.

உயர் கல்வி:- தம்புத்தேகம மத்திய கல்லூரி.

குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார்.

* 1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான இவர் 1995இல் பட்டதாரியானார்.

அரசியல் வாழ்க்கை

* 1997இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

* 1997இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் செயற்பாட்டு அரசியலுக்கு உள்வாங்கப்பட்டார்.

* 1998இல் மத்திய மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கினார்.

* 2000இல் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

* 2004 இல் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு இரண்டாவது முறையும் தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசார அமைச்சர் பதவியையும் வகித்தார்.

* 2008இல் ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

* 2010இல் தேசியப் பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

* 2014 ஜனவரி 2ஆம் திகதி ஜே.வி.பியின் தலைமைப் பொறுப்பு கையளிக்கப்பட்டது.

அவர் பதவியேற்ற பின்னர் மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது.

* 2015இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சபையில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் பதவி வகித்தார்.

* 2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடப்பட்டார்.

ஜனாதிபதித் தேர்தலும் ஜே.வி.பியும்

* 1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. சார்பில் அதன் நிறுவுநரான றோகண விஜேவீர போட்டியிட்டு 2,73,428 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

* 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு 3,44,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். (தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கின்றார்)

* 2010இல் பொதுவேட்பாளராகக் களமிறங்கிய சரத் பொன்சேகாவுக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்கியது.

* 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. போட்டியிடவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கக்கூடாது எனப் பிரசாரத்தை முன்னெடுத்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *