கொலைக் கலாசாரத்தை அரங்கேற்றிய மஹிந்தவின் அரசு மீண்டும் வருவதை விரும்புகிறீர்களா? – யாழில் ரணில் கேள்வி

“மஹிந்த அரசு மீண்டும் வரவேண்டுமா? அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை உருவாவதற்கா நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? கொலைக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கக்கூடாது.”

– இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திருநெல்வேலியில் விவசாய ஆராய்ச்சி, உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைத்தார். அத்துடன், தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகளையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று திறந்து வைக்கப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதியின் ஆரம்பம் 1954 என்றாலும் 1960ஆம் ஆண்டிலேயே ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு போதுமான அலுவலர்கள் இல்லை. இங்கு உற்பத்தி விவசாயப் பொருட்களை – பெரிய பூசணிக்காய்களையும் ஏனைய மரக்கறி வகைகளையும் பார்க்கும் போது, அவை எப்படிச் செழிப்பாக வளர்ந்துள்ளன என்பதை அறியமுடிகின்றது.

நாங்கள் இந்தத் தொழில்களை நவீனமயப்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறந்த அறுவடை பெற இயலும். மீன்பிடித்துறையை அப்படி நவீனமயமாக்கிக் குளிரூட்டிகளை அமைக்கவுள்ளோம். இதில் தனியாரும் அரசும் இணைந்தே செயற்படவேண்டும்.

21ஆம் நூற்றாண்டை நோக்கி நாங்கள் முன் செல்ல வேண்டும். நான் நல்லூர் ஆலயம் மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் போன்றவற்றுக்கு இன்று சென்றேன். இப்போது மக்கள் அமைதியாக – சந்தோசமாக வாழ்வதை நான் கண்டேன்.

மஹிந்த – கோட்டாபய ஆட்சிக் காலத்தில் இந்த நிலைமையா இருந்தது. மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தார்கள். துரதிஷ்டவசமாக எங்கள் அரசின் காலத்தில் தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன. அந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 200 பேர் வரை கைதுசெய்யப்பட்டுவிட்டனர். நாங்கள் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

கொழும்பு உச்சக்கட்டப் பாதுகாப்புப் பகுதியாகக் கூறப்பட்ட காலத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொழும்பில் உச்சக்கட்டப் பாதுகாப்பு இருந்த காலகட்டத்திலே இடம்பெற்ற இந்தக் கொலையைச் செய்தவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பாதுகாப்புமிக்க பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலில்தான் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத மஹிந்த அரசு மீண்டும் வரவேண்டுமா? அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை உருவாவதற்கா நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள்? கொலைக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கக்கூடாது. நாங்கள் அமைதியாக முன்னோக்கிச் சென்று தம்புள்ளை, வெலிமடை போன்ற விவசாய வர்த்தக நிலையமொன்றை யாழ்ப்பாணத்திலும் உருவாக்குவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *