எம்.பிக்களுக்கு 2 இலட்சம் ரூபா: அடியோடு நிராகரித்த மைத்திரி!

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 4 இலட்சம் ரூபாவுக்கு மேல் கிடைக்கிறது. அதற்கு மேலதிகமாக 2 இலட்சம் ரூபா வழங்கும் யோசனையை அமைச்சரவையில் நான் நிராகரித்தேன்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

சிறந்த அரசியல் கலாசார மொன்றுக்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கையளிக்கும் தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கிடைக்கும் சலுகைகள் மற்றும் உரிமைகள் வரம்பற்றவை. இன்று (நேற்று) காலை அமைச்சரவைக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்குவதற்கான திட்டத்தை அரசு முன்வைத்தது.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு கூடுதலாக 2 இலட்சம் ரூபாவை வழங்க முன்மொழியப்பட்டது. எனக்கு ஒரு பெரிய அழுத்தமும் வழங்கப்பட்டது.

தற்போது மாதம் ரூ .4 இலட்சத்துக்கு மேல் பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இப்படி வழங்கும் யோசனைக்கு என்னால் கையெழுத்திட முடியாது என்று சொன்னேன்” – என்றார்.

ஸ்ரீலங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர், சங்கைக்குரிய திருக்குணாமலே ஆனந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், ஏனைய மதத் தலைவர்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *