கூட்டாட்சியே கிழக்கில் ஒரே வழி! – அரசியல் தீர்வு முயற்சியில் கூட்டமைப்பு – மு.கா. ஓரணி

* இணக்கப்பாட்டின் அடிப்படையில் முதலமைச்சர் நியமனம்
* இனத்துவேசத்தை ஏற்படுத்தும் கோஷங்களைக் கைவிடுக
* தமிழ் – முஸ்லிம்களின் ஒற்றுமை மிக அவசியம்

“கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ அல்லது வேறு எந்தக் கட்சியோ தனித்து நின்று ஆட்சியமைக்க முடியாது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் பின்னரும் கூட்டாட்சிதான் இங்கு நடக்கும். தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் முதலமைச்சர் தெரிவுசெய்யப்படுவார்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

அதேவேளை, அரசியல் தீர்வு முயற்சியில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து பயணிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘புதுச்சுடர்’ வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களையும் கொண்டமைந்துள்ளது கிழக்கு மாகாணம். இந்த மாகாண சபை 37 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இந்தச் சபையில் ஒரு கட்சி தனித்து நின்று ஆட்சியமைக்க வேண்டுமெனில் குறைந்தது 19 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். மூவின மக்களும் இங்கு இருப்பதால் எந்தக் கட்சியும் தனித்து நின்று 19 உறுப்பினர்களைப் பெற முடியாது. அதுதான் தேர்தலின் பின்னர் கிழக்கில் கூட்டாட்சி நடக்கின்றது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் பின்னரும் கூட்டாட்சிதான் இங்கு நடக்கும்.

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில்தான் முதலமைச்சர் தெரிவுசெய்யப்படுவார். இந்நிலையில், இனத்துவேசத்தை ஏற்படுத்தும் கோஷங்களை இரு தரப்பிலும் இருந்து சிலர் எழுப்பி வருகின்றனர். அப்படிப்பட்ட கோஷங்களை எவரும் எழுப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

தற்போது கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தலை விரைவில் நடத்துவதற்கான அழுத்தம் பல்வேறு கட்சிகளினால் மத்திய அரசுக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றது. புதிய தேர்தல் விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

இலங்கையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஜனநாயகத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் சேர பலர் முயற்சிக்கின்றார்கள். கூட்டமைப்பின் கொள்கையைப் பின்பற்றுபவர்களை வேட்பாளர் பட்டியலில் உள்வாங்குவோம். பலமிக்க அணியைத் தேர்தலில் கூட்டமைப்பு களமிறக்கும்.

தேர்தல் நடைபெற்ற பின்னர் கிழக்கு மாகாணத்தின் இனத்தினதும் மதத்தினதும் ஒற்றுமையைக் கருத்தில்கொண்டு தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முதலமைச்சர் விவகாரத்தில் முடிவெடுப்பார்கள்” – என்றார்.

அரசியல் தீர்வு

அரசியல் தீர்வு தொடர்பில் அஷ்ரப் காலத்தில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தாம் பேச்சு நடத்தி வருகின்றோம் எனவும், அரசியல் தீர்வு முயற்சியில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து பயணிக்கும் எனவும், அதிகாரப் பகிர்வுடன் மூவின மக்களும் ஏற்கும் அரசியல் தீர்வை மத்திய அரசுடன் இணைந்து காண்பதே தமது நோக்கம் எனவும் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மேலும் கூறினார்.

மு.காவின் நிலைப்பாடு

இதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான திகதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்றும், கிழக்கில் தமிழ் – முஸ்லிம்களின் ஒற்றுமை மிக அவசியம் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ‘புதுச்சுடர்’ வார இதழிடம் தெரிவித்தார்.

2012 கிழக்குத் தேர்தல்

2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகளையும் உள்ளடக்கிக் களமிறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 உறுப்பினர்களுடன் முதலாவதாக வந்தது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களுடன் இரண்டாவதாக வந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களுடன் மூன்றாவதாக வந்தது. ஐக்கிய தேசியக் கட்சி 4 உறுப்பினர்களுடன் நான்காவதாக வந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 உறுப்பினர்களையும் இணைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முதலில் ஆட்சியமைத்தது.

ஆனால், 2015ஆம் ஆண்டு மத்திய அரசில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சியமைத்தன. அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள மைத்திரி அணியும் ஆதரவு வழங்கின. முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டார். அமைச்சுப் பதவிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மைத்திரி அணி ஆகியவற்றுக்குத் தலா ஒன்றும் கிடைத்தன. அதேவேளை, தவிசாளர் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கும், பிரதி தவிசாளர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கிடைத்தன.

(‘புதுச்சுடர்’ வார இதழ் – 2019 மார்ச் 30 – ஏப்ரல் 12)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *