நீர்கொழும்பில் புனித செபஸ்தியன் சிலை மர்மநபர்களினால் சிதைப்பு! – நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்; பேராயர் களத்துக்குச் சென்றதையடுத்து இயல்பு நிலை

நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியன் உருவச் சிலை இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் கல்லெறிந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலைக் கேள்வியுற்றதும் அந்தப் பகுதி மக்கள் அங்கு குழுமினர். இந்தச் சம்பவத்துக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அதையடுத்து அங்கு பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. அதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடுமாறு பொலிஸார் அறிவுத்தினர். அதையடுத்து முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதையடுத்துக் கொழும்புப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

இந்த விடயம் தொடர்பாக உயர்மட்டத்தினரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று கொழுப்புப் பேராயர் மக்களிடம் தெரிவித்தார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அமைதியாகச் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பேராயரின் சமாதானத்தை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். மதியத்துக்குப் பின்னர் அங்கு இயல்பு நிலைமை திரும்பியது.

புனித செபஸ்தியன் உருவச் சிலை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *