ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கரு! – பிரதமர் ரணில் அதிரடி முடிவு; பிரசாரப் பணிகளும் ஆரம்பம்

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகச் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி கரு ஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராகவும் ரணில் விக்கிரமசிங்க அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிடவுள்ளனர்.

இந்த அதிரடி முடிவை ஐ.தே.கவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய அதற்கான பிரசார வேலைகளை மறைமுகமாக ஆரம்பித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக போட்டோஷூட் பலவற்றில் அவர் கலந்துகொண்டார். அத்தனகல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதி மற்றும் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி ஆகியவற்றில் நடந்த போட்டோஷூட்களில் சபாநாயகர் கரு கலந்துகொண்டார். அந்த படங்கள் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. அதேபோல நாட்டின் பிரசித்தி பெற்ற இடங்களுக்கும் அவர் செல்லவுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தனது சபாநாயகர் பதவியை இராஜிநாமா செய்யவுள்ளார்.

அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகி அவர் சுயாதீன ஒருவராகப் போட்டியிடவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகுமாறு கருவை பிரதமர் ரணில் கேட்டதையடுத்தே இந்த ஏற்பாடுகள் நடந்துள்ளன.

முன்னதாக கடந்த அரசியல் நெருக்கடி கடந்த வருடம் ஏற்பட்டபோது கரு ஜயசூரிய அதனை மிக இலாவகமாக கையாண்டதால் அவருக்கு அனுபவ முதிர்ச்சியும் அரசியல் ஞானமும் இருப்பதாக பிரதமர் கருதுவதாக சொல்லப்பட்டது.

இதேவேளை. சபாநாயகர் கரு ஜயசூரியவையே ஜனாதிபதி வேட்பாளராக ரணில் களமிறக்கவுள்ளார் எனப் ‘புதுச்சுடர்’ சில தினங்களுக்கு முன்னரே செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *