தமிழர் இனியும் ஏமாறத் தயாரில்லை; உச்சபட்ச அதிகாரப் பகிர்வு வேண்டும்! – சபையில் சம்பந்தன் இடித்துரைப்பு

“உச்சபட்ச அதிகாரப் பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. இனிமேல் ஏமாறவும் எமது மக்கள் தயாரில்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் அவர் சபையில் பட்டியலிட்டார்.

புதிய அரசமைப்பை வழங்குவதாகக் கூறி மக்கள் ஆணையைப் பெற்ற இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடக் கூடாதெனத் தெரிவித்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை இரா.சம்பந்தன் சபையில் இன்று முன்வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

பண்டா – செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தங்களை மேற்கோள் காட்டியும், இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளின் வரலாறுகளையும் சபையில் அவர் விபரித்தார்.

சுமார் 72 நிமிடங்கள் நின்ற நிலையில் அவர் உரையாற்றினார்.
 
தனது உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்தும் இன்னும் தமிழருக்கு ஓர் அரசியல் தீர்வு இல்லை. தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர். சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது.

சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர, பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்க வேண்டும்.

விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்க உதவியது சர்வதேச சமூகம். இதனால் பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே. தமிழருக்குப் பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் பிரிவினையை விரும்பியிருக்கவில்லை. நாட்டைப் பல வழிகளில் பிரிப்பது நாட்டுக்கோ அல்லது தமிழருக்கோ நன்மையில்லை. அதுதான் சமஷ்டிக் கட்சியின் கொள்கை.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழர்களின் விருப்பமாகும். நாடு சக்திமிக்க ஒன்றாக மாற வேண்டுமானால் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

சமூக, கலாசார உரிமைகளைக் கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையை உங்களால் மறுக்க முடியுமா? 1956 ஆம் ஆண்டில் இருந்து வடக்கு, கிழக்கு மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்தனர். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. இந்த அரசு பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

சிங்கள பௌத்த மயமாக்கல் வடக்கு கிழக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதால்தான் தமிழர் பிரச்சினை தீர்வு தாமதமாகின்றதா என்று தமிழ் மக்களும் நாங்களும் அச்சம் கொண்டுள்ளோம். இது சூட்சுமமாக முன்னெடுக்கப்படுகின்றது.

எல்.எல்.ஆர்.சி. அறிக்கையின் சிபாரிசுகளை நிறைவேற்றுங்கள். சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசமைப்பை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்சி செய்தால் அது தவறு. அப்படிச் செய்தால் நீங்கள் தோல்வியடைந்த அரசாக – செல்லுபடியற்ற அரசாக ஆகிவிடுவீர்கள். எனவே, உச்சபட்ச அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *