பயங்கரவாதம் உருவாகக் காரணமாகவுள்ள அடிப்படை அம்சங்களை அறிவதே பிரதானம்! – நஸீர் வலியுறுத்து

“பயங்கரவாதக்குழுக்கள் உருவாகுவதை தடுக்கும் சட்டங்களை இயற்ற அமைச்சர் களைக் கொண்ட உபகுழு ஒன்றை அமைக்கும் பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உண்மையான பயங்கரவாத நடவடிக்கைகள் எவை என்பதை சரியான முறையில் இனங்கண்டு அவற்றை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டியது அவசியமானதே. எனினும், நாட்டில் இன்று இன, மதவாத சக்திகள் தத்தமது பிரபலங்களுக்காகவும் பரப்புரைகளுக்காகவும் இட்டுக்கட்டி வெளியிடும் போலியான தகவல்கள் தொடர்பில் பரிசீலிப்பதும் அவசியமானது. ஏனெனில், இவை பயங்கரவாதக் குழுக்களைத் தோற்றிவிக்கச் செய்யும் வலிமை கொண்டவை என்பதையும், இவற்றை முதலில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதையும் பிரதமரும் அரசும் புரிந்துகொள்ள வேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.

இவ்விடயம் குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்ட பாரதூரமான நிகழ்வுகளே, இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலைமையை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளன. இதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து சமூகங்களும் தமது பூரண உதவி ஒத்துழைப்புக்களை நல்கவேண்டும். அதேநேரம் பயங்கரவாதக்குழுக்கள் தோற்றம் பெறுவதற்கு உந்துசக்திகளாக இருக்கக்கூடிய விடயங்கள் எவை எவை என்பன குறித்து ஆய்வு செய்யவேண்டும்.

சமூகங்கள் அடக்கி ஒடுக்கப்படும்போதும் அவற்றின் மேல் வல்லாதிக்கம் திணிக்கப்படும்போதும் உண்மைகளுக்குப் புறம்பான தகவல்கள் பரப்புரைகளாக்கப்பட்டு அவை அவர்களின் இருப்புக்கும் – தனித்துவத்துக்கும் குந்தகத்தை ஏற்படுத்தும் நிலைகள் தோன்றுகின்றபோதும் பயங்கரவாத நடவடிக்கைகளை நோக்கிய எண்ணங்களும் செயற்பாடுகளும் உருவாக்கம் பெறுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பயங்கரவாதக்குழுக்கள் உருவாகுவதைத் தடுப்பதற்கு – முதலில் அவை உருவாக்கம் பெறுவதற்கான காரணிகள் எவை என்பதை அறியவேண்டும். இந்தக் காரணிகள் குறித்து நம்நாட்டை ஆண்டுவந்த அரசுகள் சரிவர அறிந்து செயற்பட்டனவா என்பதே இன்று சிறுபான்மை சமூகங்களுக்கு மத்தியிலுள்ள இருக்கின்ற கேள்வியாகும். காரணம் தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகங்கள் இன, மதவாதங்களால் நசுக்கப்பட்ட வருகின்றமையே கண்கூடு.

எனவே, அடிப்படைகளை அறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை இவ்வேளையில் வலியுறுத்த விரும்புகின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *