ஹேமசிறி, பூஜிதவுக்கு பிணை கிடைக்குமா? – 9ஆம் திகதிதான் தெரியவரும் என்கின்றனர் சட்டத்தரணிகள்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவருக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்களுக்குப் பிணை கிடைக்குமா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் திகதிதான் தெரியவரும் என்று இவர்கள் இருவரினதும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரை கொலைக்குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டு தொடர்பான சந்தேகநபர்களாகக் கருதி கைதுசெய்யுமாறு சட்டமாக அதிபரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்காக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இவர்கள் இருவரும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஹேமசிறி பெர்னாண்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், பூஜித ஜயசுந்தர நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து வைத்தியசாலைகளுக்குச் சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அங்கு மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இவர்கள் இருவரையும் கைதுசெய்தனர்.

இதன்பின்னர் வைத்தியசாலைகளுக்குச் சென்ற கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இவர்களை நேற்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், இவர்களுக்கான விளக்கமறியலை எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நேற்று நீடித்துள்ளார். இவர்களுக்குப் பிணை கிடைக்குமா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் திகதிதான் தெரியவரும்.

இவர்கள் இருவரும் குற்றமிழைக்கவில்லை. இவர்களுக்கான அதிகாரங்களைப் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி பறித்து வைத்திருந்தார். கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி அரங்கேற்றப்பட்ட அரசியல் சதிப் புரட்சியின் பின்னர் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களுக்கு ஜனாதிபதியால் அழைக்கப்பட்டிருக்கவில்லை. அதேவேளை, பாதுகாப்புச் செயலராக இருந்த ஹேமசிறி பெர்னாண்டோவையும் நேரில் சந்திப்பதை ஜனாதிபதி குறைத்து வந்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது ஜனாதிபதியைத் தான் நேரில் சந்திப்பது கடினமாக இருந்தது என நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ஹேமசிறி பெர்னாண்டோ சாட்சியமளித்திருந்தார். எனவே, உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு யார் முழுப்பொறுப்பு என்பது நாம் சொல்லாமலே நாட்டு மக்களுக்குத் தெரியும். எனவே, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவரும் பிணையிலாவது விடுவிக்கப்பட வேண்டும்” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *