மீண்டும் இன்று பிற்பகல் கூடுகின்றது தெரிவுக்குழு! – ஹிஸ்புல்லா, இலங்கக்கோன் சாட்சியம் வழங்க அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஆகியோர் இன்று சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர,பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரும் இன்று தெரிவுக்குழுவுக்கு சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை தெரிவுக்குழுவில் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி மௌலவி, காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல் சங்ககத்தின் தலைவர் மொஹமமட் சுபைய் ஆகியோர் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

தெரிவுக்குழுப் பணிகளை
இடைநிறுத்தவே முடியாது!

சபாநாயகருடனான சந்திப்பில் தீர்மானம்

இதேவேளை, ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் தெரிவுக்குழு நடவடிக்கைகளை இடைநிறுத்த முடியாது எனவும், குற்றம்சாட்டப்பட்ட இறுதி நபர் சாட்சியமளிக்கும் வரை தெரிவுக்குழு நடவடிக்கையைத் தொடர்வது எனவும் நேற்றுத் தீர்மானிக்கப்பட்டது.

தெரிவுக்குழுவின் பதில் தலைவர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தலைமையிலான தெரிவுக்குகுழு உறுப்பினர்கள் நேற்றுச் சபாநாயகர் கருஜயசூரியவைச் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது தெரிவுக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்புகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்புப்பட்ட விடயங்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் விசாரிக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *