அரசியல் கைதிகளை விடுவிப்பது கடினம்! – மைத்திரி திட்டவட்டம்

“நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது பொதுமன்னிப்பு வழங்குவது கடினம். இவர்களில் பெரிய குற்றங்களைப் புரிந்தவர்களை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்கவும் முடியாது. இதுதான் உண்மை நிலைவரம்” என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது” என்றும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுத்துள்ளார்.

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியுமாயின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை ஏன் விடுதலை செய்யமுடியாது? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சபையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் பயங்கரவாதி அல்லர். அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவரும் அல்லர். நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது முன்வைக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. நான், எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரைப் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ததில் தவறேதும் இல்லை. ஆனால், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களுக்குத் தற்போதைய நிலைமையில் பொதுமன்னிப்பு வழங்குவது கடினம்.

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து அவரை விடுவிக்குமாறு பௌத்த மத பீடங்கள், சிவில் அமைப்புகள் உட்படப் பல்வேறு தரப்புக்களும் என்னிடம் கோரி வந்தன. அதற்கமைய அவருக்கு நான் பொதுமன்னிப்பு வழங்கினேன். விடுதலையானவுடன் அவர் தனது தாயாருடன் என்னை வந்து நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவரின் தாயாரும் எனக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது பல விடயங்களை நான் தேரரிடம் கூறியுள்ளேன். பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் குற்றமிழைத்தால் அது மன்னிக்க முடியாத பெரிய குற்றமாகக் கருதப்படும் என்று அவரிடம் நான் நேரில் தெரிவித்துள்ளேன்.

ஞானசார தேரருடன் அரசியல் கைதிகளை ஒப்பிட வேண்டாம். இவர் செய்த குற்றம் வேறு. அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றம் வேறு. இரண்டையும் ஒப்பிட வேண்டாம்.

தற்போது 200 இற்கு உட்பட்ட அரசியல் கைதிகள்தான் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ளனர். ஏனையோர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளில் குற்றவாளிகளும் உள்ளனர்; சந்தேகநபர்களும் உள்ளனர். குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்கின்றார்கள். சந்தேகநபர்கள் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் அனைவரினதும் விடுதலை விவகாரம் தொடர்பில் நாம் உயர்மட்ட பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இவர்களுக்குத் தற்போது பொதுமன்னிப்பு வழங்குவது கடினம். அதேவேளை, இவர்களில் பெரிய குற்றங்களைப் புரிந்தவர்களை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்கவும் முடியாது. இதுதான் உண்மை நிலைவரம். ஆனால், அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் நாம் தொடர்ந்து உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவோம். அவர்களை வைத்து எவரும் அரசியல் செய்ய வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *