பல்கலையில் கைதானோருக்கு நாளைவரையும் விளக்கமறியல்! பிணையா? விடுவிப்பா? என்று அன்றைய தினமே கட்டளை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் இருந்தது என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும், தியாகி திலீபனின் படம் இருந்தது என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலைப் பொறுப்பாளரையும் நாளை 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அவர்களைப் பிணையில் விடுவிப்பதா? அல்லது வழக்கில் இருந்து விடுப்பதா? என்பது தொடர்பில் அன்று கட்டளையிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, அங்குள்ள மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர்களின் படங்கள் இருந்தன என்று தெரிவித்து மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரனும், செயலாளர் எஸ்.பபில்ராஜும் கைதுசெய்யப்பட்டனர். அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் தியாகி திலீபனின் படம் இருந்தது என்று தெரிவித்து சிற்றுண்டி நடத்துபவர் கைதுசெய்யப்பட்டார். மாணவர்கள் இருவரும் அன்று இரவு 8.30 மணியளவில் நீதிவான் இல்லத்தில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சிற்றுண்டிச்சாலை நடத்துபவர் மறுநாள் நீதிவானிடம் முற்படுத்தப்பட்டு அவரும் எதிர்வரும் 16ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், நேற்று மாணவர்கள் சார்பாகவும், சிற்றுண்டிச்சாலை நடத்துபவர் சார்பாகவும் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணிகளான ச.சயந்தன், க.சுகாஸ், கு.குருபரன், வி.மணிவண்ணன், வி.திருக்குமரன், செலஸ்ரின் ஆகியோரால் இரு நகர்த்தல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குப் பொலிஸரால் சோடிக்கப்பட்ட வழக்கு என்றும், உரிய சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.

திலீபனின் நினைவு தினத்துக்குத் தடை உத்தரவு கோரிப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தபோது நினைவேந்தலை நடத்தலாம் என்ற உத்தரவை நீதிமன்று கடந்த காலத்தில் பிறப்பித்திருந்தது. திலீபனின் நினைவாலயத்தைச் சீரமைக்க அமைச்சரவையே நிதி ஒதுக்கியுள்ளது. அவ்வாறிருக்கத் திலீபனின் படம் வைத்திருந்தமை குற்றமாகாது என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

மாணவர்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது பதவிநிலைக்கு குறையாத ஒருவரே சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து சட்டத்தரணிகள் நீண்ட சமர்ப்பணத்தைச் செய்தனர்.

சந்தேகநபர்களை 72 மணிநேரத்துக்குள் நீதிமன்றில் முற்படுத்தியதால் பொலிஸ் அத்தியட்சகரால் மன்றில் முற்படுத்த வேண்டும் என விதி தேவையற்றது என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி மாணவர்களைப் பிணையில் விடக்கூடாது என்று கோப்பாய் பொலிஸார் மன்றில் கோரினார்.

எனினும், மாணவர்களைப் பிணையில் விடுவிப்பதா? அல்லது வழக்கில் இருந்து விடுப்பதா? என்பது தொடர்பில் நீதிமன்றக் கட்டளைக்காக வழக்கு நாளை 8 திகதிவரை ஒத்திவைக்கப்படுகின்றது என்று அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *