வடக்கில் இராணுவ மயமாக்கலை ஏற்கவேமுடியாது – விக்கி

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை காரணமாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்து நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிஸாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

அவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன், நாட்டின் பாதுகாப்பை விரைவாக உறுதிப்படுத்தி அவசரகால நிலைமையை அரசாங்கம் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருப்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முழு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நான் ஏற்கனவே கூறியபடி எல்லா மாகாணங்களுக்கும் ராணுவத்தை சம அளவில் பகிர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரைச் சாட்டாக வைத்து இராணுவத்தினரை இங்கு நிலைநிறுத்தி வைத்த அரசாங்கம் அண்மைய நிலைமையைச் சாட்டாக முன்வைத்து வடமாகாணத்தை ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.

இராணுவம் தொடர்ந்து நிலைக்கொண்டிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், தாக்குதலை காரணம்காட்டி ராணுவத்தினரை தொடர்ந்து வடக்கு கிழக்கில் வைத்திருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியது கவலை தருகிறது.

பாதுகாப்பு தரப்பினதும் அரசாங்கத்தினதும் அலட்சியமே இன்றைய நிலைக்கு காரணம். மரணித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டிருந்தால், இன்று நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யவேண்டி இருந்திருக்காது.

இயன்றளவு விரைவாக அவசர காலப் பிரகடனத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும் அவசரகாலச் சட்டத்தை வைத்து அப்பாவி மக்களைக் கைது செய்து துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *