இந்தோனேசியாவில் அடை மழை – 40 பேர் பலி!

இந்தோனேசியாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தோனேசியாவில் அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே பருவகாலங்களில் கனமழை பெய்வதும் இதனை தொடர்ந்து நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஏற்படுவதும் வழக்கம்.
இந்த நிலையில் இந்தோனேசிய பேரிடர் கழகம் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என இன்று உறுதி செய்துள்ளது.  சுமத்ரா தீவின் பெங்குலுவில் 13 பேரை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை லாம்பங்க் அருகே பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தினை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.
அதேவேளையில், ஜகர்த்தா நகரின் உள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலியானார்கள்.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.  சுமத்ராவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.
இதனால் 12 ஆயிரம் பேர் வரை வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு தற்காலிக முகாம்கள் மற்றும் உணவு வசதி ஆகியவை செய்து தரப்பட்டு உள்ளன.  சட்டவிரோத சுரங்கங்கள் நிலச்சரிவு ஏற்படுவதற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
இந்த வருடம் சூலாவிசி தீவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவிற்கு 70 பேர் பலியாகி உள்ளனர்.  10 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர்.  இதேபோன்று கடந்த மாதம் இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவிற்கு 112 பேர் பலியானார்கள்.  90க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *