நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு இப்போதைக்குச் சாத்தியமில்லை! – ‘பல்டி’ அடிக்கின்றது ஐ.தே.க.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி,

2020ஆம் ஆண்டு தெரிவாகும் ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் உடையவராக இருப்பார் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவதற்கு முனைப்புக் காட்டும் ஒரு சூழலில் ஐக்கிய தேசியக் கட்சி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ள நிறைவேற்று அதிகார ஒழிப்பு, 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது இவ்வாறானதொரு நிலைப்பாட்டை, ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில் அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான அஜித் பி பெரேரா இது தொடர்பில் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பை மாற்றியமைப்பது நடைமுறைக்கு சாத்தியமான விடயமல்ல. 2020ஆம் ஆண்டு தெரிவாகும் ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் உடையவராகவே இருப்பார்.

நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட வேண்டுமானால் அரசமைப்பில் இதுவரையில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் 4ஆவது உறுப்புரை பொது வாக்கெடுப்பு மூலம், மக்களின் அனுமதியுடன் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இனவாதத்தின் ஊடாக இவ்வளவு காலமும் ஆட்சி புரிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஆதரவு கிடைக்கப் போவதில்லை. அதையும் மீறி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் களமிறக்கப்படுவாராக இருந்தால் அவர் தோல்வியின் சின்னமாக கருதப்படுவார்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *