ஜனாதிபதித் தேர்தலுக்கான ரணிலின் ‘ஒப்பரேசன் -02’ !

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு பற்றிய கதைதான் தற்போதைய அரசியல் பேசு பொருளாக மாறியுள்ளது. இதில் ஐக்கிய தேசிய கட்சியை விடவும் சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும்தான் அதிகம் தலையை உருட்டுகின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமக்குக் கிடைத்த சாதகமான நிலைமையைப் பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலில் தனித்துக் களமிறங்கி வென்றுவிடலாம்

என்ற நம்பிக்கையில் மஹிந்தவின் பொதுஜன பெறமுண இருக்கின்ற அதேவேளை,மஹிந்த தரப்பையும் இணைத்துக்கொண்டு மைத்திரியை மீண்டும் களமிறக்க வேண்டும் என்ற திட்டத்தில் சுதந்திரக் கட்சி உள்ளது.

ஆனால், ரணில் விக்ரமசிங்கவோ மஹிந்த தரப்பு தனியாகவும் சுதந்திரக் கட்சி தனியாகவும் களமிறங்குவதற்கான திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்று அறிய முடிகிறது.

அப்படி நடந்தால் அது ஐக்கிய தேசிய கட்சிக்கே சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ரணிலின் இந்த வியூகத்தை வெற்றி பெற வைப்பதற்குத் துணை போகின்றவர்கள் இரண்டு குழுக்கள்.

மஹிந்த தரப்பில் விமல் வீரவன்ச தலைமையிலான குழு,மைத்திரி தரப்பில் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான குழு.

கோட்டாபே ராஜபக்ஸ அல்லது பொருத்தமான வேறு ஒருவர் பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விமல் வீரவன்சவின் குழு உள்ளது.

அதேபோல்,சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்தாலும் சரி இணையாவிட்டாலும் சரி சுதந்திரக் கட்சி சார்பில் மைத்திரி போட்டியிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சுதந்திரக் கட்சியினதும் நிலைப்பாடாகும்.

அதிலும்,துமிந்த திஸாநாயக்கவின் குழுவினர் ,மைத்திரி மஹிந்தவுடன் இணையாது தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.அதற்கு ஏற்ப காய் நகர்த்தி வருகின்றனர்.

மைத்திரி தரப்பில் நகர்த்தப்படும் இந்தக் காயும் மஹிந்த தரப்பில் விமலின் குழுவால் நகர்த்தப்படும் காயும் ரணிலின் வியூகம் என்பதுதான் உண்மை.

தனித்துப் போட்டியிட்டால் மைத்திரி தோற்பார் என்று தெரிந்தும்கூட துமிந்தவின் குழுவினர் தனித்துப் போட்டியிடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளமைக்குக் காரணம் மஹிந்தவின் வேட்பாளரைத் தோற்கடித்து ரணிலை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதுதான்.

மறுபுறம்,ஜேவிபி தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.ஜேவிபியின் வாக்கு வங்கி என்பது மஹிந்த-மைத்திரி எதிர்ப்பு வாக்கு வங்கியாகும்.ஜேவிபி தனித்துப் போட்டியிடாமல் நடுநிலை வகித்தாலே போதும்.அந்த வாக்குகள் ரணிலுக்கு விழும் என்று ரணில் நம்புகிறார்.

இதனால் தனித்துப் போட்டியிடும் ஜேவிபியின் முடிவை மாற்றுவதற்கான முயற்சியில் ரணில் ஈடுபட்டுள்ளார் என்று அறிய முடிகின்றது.

இவ்வாறு ரணில்-மைத்திரி-மஹிந்த தரப்பு என மூன்று வேட்பாளர்களை களமிறக்கி எதிர்த்தரப்பு வாக்குகளை சின்னாபின்னமாக்கி தான் வெற்றி பெறுவதற்கு ரணில் வகுக்கும் இந்த வியூகம் வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

[ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக் ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *