கல்லறையிலும் ஒன்றாகவே உறங்கப்போகும் உறவுகள்! – மனதை உருக்கும் கண்ணீர்க் காட்சிகள்

 

மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இரட்டைப் பெண் குழந்தைகள் உட்பட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சொந்த உறவுகளான 10 பேரினதும் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளன.

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள், ஹயஸ் வானில் சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பியபோதே விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்கள்.

மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், சடலங்கள் இன்று அதிகாலை மட்டக்களப்புக்குக் கொண்டுவரப்பட்டன. 10 பேரின் சடலங்களும் அவர்களின் வீடுகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளதால் சடலங்கள் இறுதி ஆராதனைகளுக்காக மட்டக்களப்பு – புளியங்குடா புனித செபஸ்தியார் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு தற்போது அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையை உலுக்கியுள்ள இந்தக் கோர விபத்துச் சம்பவம் மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்குப் பெருமளவானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உறவினர்கள் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தும் காட்சி அனைவரினதும் மனதையும் உருகச் செய்துள்ளது.

இந்தக் கோர விபத்தில் ஜோசப் ரெலின்டன் ஜோப்ஸ் (வயது – 56), அவரது மனைவி சில்வியா ஜோப்ஸ் (வயது – 50), அன்ரனி லிஸ்டர் அலெக்ஸாண்டர் (வயது – 35), அவரது மனைவி நிசலி அலெக்ஸாண்டர் (வயது – 27), அவர்களது இரட்டைப் பெண் பிள்ளைகளான ஹனாலி அலெக்ஸாண்டர் (வயது – 04), பைகா அலெக்ஸாண்டர் (வயது – 04), யூட் பிரின்ஸ் ஹென்ரிக்ஸ் (வயது – 48), அவரது மனைவியான மரியா பென்சியா ஹென்ரிக்ஸ் (வயது – 42), அவர்களது மகளான செரேப் ஹென்ரிக்ஸ் (வயது 10), அவர்களது மகனான யூட் பிரின்ஸ் ஹெய்ட் ஹென்ரிக் (வயது – 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இவர்களுடன் ஹயஸ் வானில் சென்ற யூட் பிரின்ஸ் ஹென்ரிக்ஸின் மகளான செகானி ஹென்ரிக்ஸ் (வயது – 13) மற்றும் ரெசானி பெர்கஸால் (வயது – 16) ஆகியோர் படுகாயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இருவரும் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *