மதுஷுக்கு ஆயிரம் கோடி ரூபா சொத்துகள்: குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷுக்கு எதிராகக் குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்பார்ப்பதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மதுஷுக்கு எதிராகக் கிடைக்கப்பெற்றுள்ள சாட்சியங்களின் அடிப்படையில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

டுபாயில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வு ஒன்றில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்து குற்றப் பத்திரம் தாக்கல் செய்வது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுகின்றது என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாட்சிகள் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, மதுஷுக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது என சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மதுஷை இலங்கைக்குக் கொண்டுவருதற்காக டுபாய் அரசுடன் இணைந்து கடந்த வாரம் முதல் செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், மதுஷுக்கு 1000 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துகள் உள்ளன என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி பாணந்துரை – வாழைத்தோட்டத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட மதுஷின் நண்பரான கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தகவல் கிடைத்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி டுபாயில் பிறந்த நாள் நிகழ்வு ஒன்றில் வைத்து, பாதாள உலகக் குழுத் தலைவரான மாக்கந்துர மதுஷ், பாடகர் அமல் பெரேரா, நடிகர் ரயன் உள்ளிட்ட 31 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் 15 பேர் இதுவரையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுள், நடிகர் ரயன் வென் றூயன், முன்னாள் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் லலித் குமார, மதுஷின் நெருங்கிய சகாவான போதைப்பொருள் வர்த்தகர் கஞ்சிப்பான இம்ரான், பாதாள உலகக் குழு உறுப்பினரான ரொடும்ப அமில என அறியப்படும் அமில சம்பத் மற்றும் ஜங்க எனப்படும் அனுஷ்க கௌஷால் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *