வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை எதிர்க்குமா கூட்டமைப்பு?

வரவு – செலவுத் திட்டத்தில் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசின் சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பனவின் உரையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சினம்கொள்ள வைத்துள்ளது.

”  திலக் மாரப்பன கூறிய அனைத்தையும் நாம் நிராகரிக்கின்றோம். அந்தக் கூற்றுகள் உண்மைக்குப் புறம்பானவை. சட்டத்துக்கு முரணானவை.

அது தொடர்பில் எங்களின் கடுமையான எதிர்வினையை வெளிப்படுத்துவோம்.” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

‘பட்ஜட்’டில் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கான குழுநிலை விவாதம் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது மாரப்பனவின் உரை எதிராக கண்டனத்தையும், இது விடயத்தில் தமது நிலைப்பாட்டையும் கூட்டமைப்பு வெளிப்படுத்தவுள்ளது.

இந்நிலையிலேயே, குழுநிலை விவாதத்தின்போது வாக்கெடுப்பைகோரி, வெளிவிவகார அமைச்சுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என தமிழர் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.

” ‘பட்ஜட்’டில் வடக்குக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாககூறி இரண்டாம்வாசிப்பின்போது அதற்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களித்தது. இவ்வாறு செய்துவிட்டு இறுதி வாக்கெடுப்பின்போது எதிர்ப்பை வெளியிடமுடியாது.

எனினும், குறைந்தபட்ச எதிர்ப்பு நடவடிக்கையாக குழுநிலை விவாதத்தின்போது, வெளிவிவகார அமைச்சுக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்கலாம். ” என தமிழ் பிரதிநிதியொருவர் சுட்டிக்காட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *