உரிமை அரசியலுக்கு முற்போக்கு கூட்டணியே உயிர்கொடுத்தது – வேலுகுமார் எம்.பி. பெருமிதம்!

‘’ அபிவிருத்தி அரசியலுக்கு அப்பால் மலையகத்தில் மீண்டும் உரிமை அரசியலுக்கு  உயிர்கொடுத்து – அதற்கு உரமூட்டி எழுச்சிக்கான களத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியே தற்போது அமைத்துக்கொடுத்துள்ளது.

எனவே, சமூகமாற்றத்துக்கான பயணத்தில் பெண்களும் எம்முடன் கரம்கோர்க்க வேண்டும்.’’ – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் அறைகூவல் விடுத்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மலையக மக்கள் முன்னணியால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வுகள் இரம்பொடை, கலாசார மண்டபத்தில் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக பங்கேற்று உரையாற்றுகையிலேயே வேலுகுமார் எம்.பியால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘’ உலகில் அனைத்து துறைகளிலும் பெண்கள் இன்று வெற்றிநடைபோடுகின்றனர். பல சாதனைகளை புரிவதுடன், உயர்பதவிகளையும் அலங்கரித்துவருகின்றனர்.

முண்டாசு கவிஞன் பாரதியின், வரிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மகளிர்படை வீறுநடைபோடுவது மகிழ்ச்சியளிக்கின்றது.

எமது பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பெண்களும் இன்று விழித்தெழுந்து – மாற்றத்தை நோக்கி பயணிக்க ஆசைப்படுகின்றனர். அதற்கான அரசியல் தலைமைத்துவத்தை நாம் வழங்கவேண்டியுள்ளது. எனவே, மகளிர் அமைப்புகள் இது விடயத்தில் கூடுதல் அக்கறையுடன் செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

கூடை சுமந்து, சுமந்தே கூன்விழுந்து செத்துமடியும்வரை சாதாரணத் தொழிலாளியாகத்தான் வாழவேண்டும் என்ற நிலை பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பெரும்பாலான பெண்களுக்கு இருக்கின்றது. இந்நிலைமையை மாற்றி அமைத்து, அவர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, தலைநிமிர்ந்து வாழக்கூடிய புதுயுகத்தை உருவாக்குவதுதான் எமது நோக்கமாகும்.

அடுப்படியில் மட்டுமல்ல அதிஉயர்சபையான பாராளுமன்றம்வரை பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். இதனால்தான் அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் யோசனைக்கு எவ்வித நிபந்தனையுமின்றி முழு ஆதரவையும் வழங்கினோம்.

அதேவேளை, 90 காலப்பகுதியில் மலையகத்தில் இளைஞர்கள் மத்தியில் எழுச்சி தீ மூண்டவேளையில் அதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கி இளைஞர்களை சிறப்பாக வழிநடத்தினார் அமரர். பெ. சந்திரசேகரன்.

அபிவிருத்திக்கு அப்பால் உரிமை அரசியல் குறித்து கோஷம் எழுப்பட்டதுடன், மலையகத்துக்கு வெளியில்வாழும் தமிழ் மக்களுடன் உறவுப்பாலத்தையும் கட்டியெழுப்பினார். அவரின் மறைவின் பின்னர் உரிமைக்குரல் மௌனித்தது. அதற்கு பல காரணங்களும் உள்ளன.

எனினும், தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமான பின்னர், உரிமை அரசியலுக்கு மீண்டும் உயிர்க்கொடுக்கப்பட்டுள்ளது. குறுகிய காலப்பகுதிக்குள் பல உரிமைகளையும் வென்றெடுத்துள்ளோம். எவர் எவ்வாறு விமர்சித்தாலும் இவற்றை நாம் பாரிய வெற்றிகளாகவே கருதுகின்றோம்.

மலையக இளைஞர்கள் மத்தியில் இன்று எழுச்சி ஏற்பட்டுள்ளது. சமூக மாற்றத்துக்காக அவர்கள் குரல்கொடுத்துவருகின்றனர். இது வரவேற்ககூடிய விடயமாகும். உரிமைக்காக குரல் எழுப்புவதற்கு இருந்த தடைகளை நீக்கி, அதற்கு களம் அமைத்துக்கொடுத்துள்ளோம்.

இளைஞர்கள் மட்டுமல்ல யுவதிகளும் சமூகமாற்றத்துக்கான பயணத்தில் இணையவேண்டும். அரசியல்வாதிகள், சிவில் அமைப்புகள், மக்கள் ஆகிய மூன்று தரப்பும் இணைந்து பயணித்தால் இலக்கை இலகுவில் அடைந்துவிடலாம்.

ஸஎனவே, இளைஞர்களுக்கு சுயநலமற்ற அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராகவே இருக்கின்றது.’’ என்றும் கூறினார் வேலுகுமார் எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *