கடன் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாட்டையே மீண்டும் கையளிப்போம்! – மஹிந்த அணிக்கு ரணில் சாட்டையடி

“நாட்டைக் கடனுடன் பொறுப்பேற்றிருந்தாலும் கடன் சுமையிலிருந்து விடுவித்துவிட்டே நாட்டை மீண்டும் கையளிப்போம்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வங்குரோத்து நிலையிலுள்ள சில அரசியல் கட்சிகள் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும், கடன் விவகாரத்தை அரசு திறைமையான முறையில் நிர்வாகம் செய்து வருகின்றது எனவும் அவர் கூறினார்.

லிந்துலை – தலவாக்கலை நகர சபையின் தலைவர் அசோக சேபால உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டனர். இவர்கள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் உரையாற்றிய பிரதமர் ரணில்,

“லிந்துலை தலவாக்கலை நகரசபையின் தலைவர் அசோக்க சேபால ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை அறிந்து சரியான முடிவை எடுத்துள்ளார். இதுவரை தனியாகச் செயற்பட்டுவந்த அவர், ஆதரவான குழுவுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இருக்கின்றனர். எமது நாடு அதிகமான அந்நிய செலாவணியினை பெற்றுக்கொள்வது வெளிநாட்டு வேலைவாய்ப்பினாலாகும். அதன் மூலம் 7000 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைக்கின்றது. இவ்வருடத்திலும், கடந்த வருடத்திலும் ஒட்டுமொத்தமாக 19,000 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

அவற்றில் அதிகமான தொகை உங்கள் பெற்றோர்களின் மூலமே கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

உங்கள் பெற்றோர் நாட்டுக்கு வழங்கும் சேவையைக் கவனத்தில்கொண்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உங்களுக்கு வழங்கப்படுகின்ற புலமைப்பரிசில் தொகையை இரு மடங்காக உயர்த்தியுள்ளார். அது தொடர்பில் அமைச்சருக்குத் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென ஒரு வீடு இருக்க வேண்டும் என ஆசை உண்டு. அதேபோன்று சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுக்கும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக நாங்களும் இவ்வாறு உதவிகளை வழங்கி வருகின்றோம்.

அதேபோன்று இம்முறை வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் புதிய யோசனையொன்று முன்மொழியப்பட்டுள்ளது. அதுதான், வீடொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்காக 10 மில்லியன் ரூபா கடன் தொகையை வழங்குவதாகும்.

இந்த யோசனையையும் நிதி அமைச்சுக்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவே முன்வைத்தார். இத்திட்டத்தின் ஊடாக முழுமையான நன்மைகள் உங்கள் பெற்றோர்களுக்கே கிடைக்கின்றன. அதற்காகவும் அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களுக்கு நலன்களை ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமையுமாகும். எனக்கு முன்பதாக இங்கு உரை நிகழ்த்திய அமைச்சின் செயலாளர், நான் கல்வி அமைச்சராக இருந்தபோது ஆற்றி சேவையை ஞாபகமூட்டினார். நான் அன்று கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில்தான் முதன் முதலாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக இலங்கையர்கள் வெளிநாடு செல்ல ஆரம்பித்தனர்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *