மு.கா. – கூட்டமைப்புக்குமிடையில் நெருங்கிய உறவு தொடரவேண்டும்!

‘’ ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் எப்போதும் நெருங்கிய உறவும், கலந்துரையாடல்களும் தொடரவேண்டும். எனவே, தேக்கநிலையிலுள்ள பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகும் என உறுதியாக நம்புகின்றேன்.”

-இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வரும், தற்போதைய ‘நைட்டா’வின் தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் உட்பட மேலும் சில விடயங்கள் குறித்து ‘புதுச்சுடர்’ இணையம் மற்றும் ‘புதுச்சுடர்’ வார இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு,

கேள்வி – மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், கிழக்கு மாகாணசபையின் முதல்வராக பதவி வகித்த நீங்கள், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் ( நைட்டா) தலைமைப்பதவியை ஏற்றுள்ளீர்கள். அப்படியானால் தேர்தலில் களமிறங்கும் நோக்கம் இல்லையா?

பதில் – அவ்வாறு இல்லை. தேர்தலில் நிச்சயம் குதிப்பேன். மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றாலும், பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டாலும் போட்டியிடுவதற்கு தயார் நிலையிலேயே இருக்கின்றேன்.

பதவிகாலம் முடிவடைந்து ஆளுநர்களின் கட்டுப்பாட்டின்கீழேயே மாகாணசபைகள் தற்போது இயங்குகின்றன. அவற்றுக்கு பழைய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். எனினும், நடப்பதாக தெரியவில்லை.

இந்நிலையில்தான் தலைவரின் வேண்டுகளுக்கிணங்க, பிரதமரால் எனக்கு இப்பதவி வழங்கப்பட்டது. மக்களுக்கு இதன் ஊடாகவேனும் சேவை வழங்குவதே முதன்மை நோக்கமாகும். எனவே, இப்பதவியை ஏற்றதால், தேர்தலில் போட்டியிடமாட்டேன் என கருதமுடியாது.

கே – அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட அதிகாரங்கள் இன்னும் முழுமையாகப் பகிரப்படவில்லை. எனவே, மாகாணசபை முறைமை மேலும் பலப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை நம்பமுடியுமா?

ப- அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இதயசுத்தியுடன் அப்பணி முன்னெடுக்கப்படுமானால் சிலவேளை மாற்றம் வரலாம். எனினும், ஆதரவைவிட தற்போது எதிர்ப்புகளே குவிகின்றன.

எல்லாவற்றுக்கும் முதல் அரசமைப்பிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

குறிப்பாக 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு எவரின் அனுமதியையும் பெறவேண்டியதில்லை. கைவசம் இருப்பது முழுமையாக வழங்கப்பட்டால்தான் ஏனையவை நடைபெறுமா, இல்லையா என்பதை ஊகிக்ககூடியதாக இருக்கும்.

கே – பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பகிர்வதற்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றனவே…?

ப- பொலிஸ், காணி அதிகாரங்கள் மட்டுமல்ல மாகாணசபைகளுக்கு நிதிபங்கீட்டு ( முதலீடு பங்கீடு) அதிகாரமும் வழங்கப்படவேண்டும்.

எனினும், இவ்வதிகாரமானது நீண்டகாலமாக மூடிமறைக்கப்பட்டுவருகின்றது. உதாரணமாக மாகாணசபைகளின்கீழேயே 95 சதவீதமான பாடசாலைகள் இயங்குகின்றன. எனினும், நிதி ஒதுக்கீட்டில் 92 சதவீதம் மத்திய அரசிலுள்ள அமைச்சுக்கு ஒதுக்கப்படுகின்றது.

5 சதவீத பாடசாலைகளுக்கு அவ்வளவு தொகை எதற்கு? குறித்த நிதி ஒதுக்கீட்டில் என்ன நியாயம் இருக்கின்றது?

இதை சுட்டிக்காட்டி போராடி எமது ஆட்சியின்கீழ் பல திட்டங்களை கொண்டுவந்தோம். புதிய அரசியலமைப்பு வரவேண்டும், அதிகாரப்பகிர்வு இடம்பெறவேண்டும் என நேர்சிந்தனை இருந்திருக்குமானால், மாகாணங்களுக்கு நிதி அதிகாரம் என்றோ பகிரப்பட்டிருக்கும். இதை பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளேன்.

இதையே செய்யாதவர்கள் புதிதாக எதை வழங்கப்போகின்றார்கள்? எல்லாம் பம்மாத்து நடவடிக்கைதான்.

கே– வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையவேண்டும் என கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இரண்டு மாகாணங்கள் விரும்பினால் இணையலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து?

ப – அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்திலும் இவ்விடயம் இருந்தது.

இரண்டு மாகாணங்கள், அங்குவாழும் மக்கள் விரும்பினால் இணையலாம். இந்த கோட்பாடு வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல, ஏனையப்பகுதிகளுக்கும் பொருந்தும்.

இருக்கின்ற சிக்கல்களுக்கு மத்தியில் மாகாணங்கள் இணையுமா என்பது கேள்விக்குறியே.

கே- தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரசியல் தீர்வைப்பெறும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இறங்கின. இருதரப்பிலிருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டன. அவை தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளன. மீண்டும் பேச்சுகள் ஆரம்பிக்கப்படுமா?

ப- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நெருங்கிய உறவும், பேச்சுவார்த்தையும் தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்பதுதான் எனது அரசியல் நிலைப்பாடும்கூட.

இவ்விரு கட்சிகளுக்குமிடையில் புரிந்துணர்வு இருந்தாலும் பொதுவானதொரு புரிந்துணர்வுக்கு வரவேண்டியது கட்டாய தேவையாகும். காணிப்பிரச்சினையாக இருந்தால் என்ன, அல்லது வேறு எந்தப்பிரச்சினையாக இருந்தால் என்ன முதலில் இணக்கப்பாடு எட்டப்படவேண்டும்.

அவ்வாறு நடக்குமானால் நமக்குள்ளேயே பேச்சு நடத்தி பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணலாம். எதுவுமே நடக்ககூடாது என்பதில் குழுவொன்று குறியாக இருக்கின்றது. அந்த சதிகார வலைக்குள் நாம் சிக்கிவிடக்கூடாது.

எனவே, மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாகவேண்டும். ஆரம்பமாகும் என நம்புகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான உறவு தொடரவேண்டும் என குருணாகலையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் அறிவித்திருந்தார் என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றேன்.

கே – கடந்த ஆட்சியின்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக பலவழிகளிலும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. உரிய வகையில் விசாரணைகளும் இடம்பெறவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

நல்லாட்சியின்கீழும் இத்தகைய சில சம்பவங்கள் அரங்கேறின. விசாரணைகள் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளனவா?

ப- எல்லா விடயங்களிலுமே மந்தத்தன்மை நீடிக்கின்றது என்பதை ஏற்கத்தான் வேண்டும். கடந்தகாலங்களில் இடம்பெற்ற சம்பவங்களாக இருந்தால்என்ன, இந்த ஆட்சியின்கீழ் நடைபெற்ற சம்பவங்களாக இருந்தால் என்ன இன்னும் முற்றுமுழுதாக நீதிக்கிடைக்கவில்லை.

குற்றவாளிகளும் உரியவகையில் தண்டிக்கப்படவில்லை. இது இந்நாட்டிலுள்ள பெரும் குறைப்பாடாகும். சிறுபான்மையின மக்களுக்கு பிரச்சினை ஏற்படுகின்றபோது நீதி நிவாரணம் என்பது முழுமையாக கிடைப்பதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

கே – மாகாணசபைத்தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம் எவ்வாறு அமையும்?

ப – இவ்விரண்டு தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடைபெறலாம் என தகவல் கிடைத்துள்ளது. ‘பட்ஜட்’ நிறைவேறிய கையோடு அது நடைபெறலாம் என ஊகிக்கப்படுகின்றது.

எதுஎப்படி இருந்தாலும் தேசிய மட்டத்திலான தேர்தல் ஒன்றுவரும் பட்சத்தில் கட்சியின் உயர்பீடத்துடன் கலந்துரையாடி உரிய நேரத்தில் – உரியவகையிலான தீர்மானத்தை தலைவர் எடுப்பார்.

கே – புத்தளம் அறுவைக்காடு பகுதியில் குப்பைக்கொட்டுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர். எனினும், அங்குதான் குப்பை கொட்டப்படும் என்பதில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறியாக இருக்கிறார். இதற்கு ஜனாதிபதியும் ஆதரவு வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்யப்போகின்றது?

ப – இது மக்களுடன் தொடர்புபட்ட பிரச்சினையாகும். மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படும் விவகாரமாகும். எனவே, அடாவடி அரசியல்மூலம் இதனை செய்யமுடியாது. அவ்வாறு செய்யமுற்படுவது அநீதியான செயலாகும்.

குப்பை பிரச்சினையைவிட சம்பிக்கவின் பிரச்சினைதான் பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. விஞ்ஞான ரீதியிலான பொறிமுறை என்னவென்பதை அவர் ஆராயவேண்டும். எதுஎப்படியோ மக்கள் பக்கம்தான் நாம் நிற்போம்.

கே – முஸ்லிம் கட்சிகளின் தேசிய மட்டத்திலான கூட்டணி குறித்து கதை அடிபடுகின்றது. மயிலும், முரமும் இணைவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?

ப – இணையமுடியுமாக இருந்தால் இணைவது நல்லவிடயம்தானே? நிறைய முஸ்லிம் கட்சிகள் இருக்கின்றன. அவை இணைவதற்கான வாய்ப்புகள் இருந்தால் வரவேற்கப்படக்கூடிய விடயமாகும்.

கே – மறப்போம், மன்னிப்போம் என்ற பிரதமரின் யோசனை குறித்து உங்கள் கருத்து?

ப – அது பிரதமரின் தனிப்பட்ட கருத்தாகும். கடந்தகால சம்பவங்களை எப்படி மறப்பது, எவ்வாறு மன்னிப்பது என்பதை பிரதமர்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *