மு.காவுடன் கூட்டமைப்பினர் நேரில் பேச்சு நடத்தத் தயார்! – மாவை எம்.பி. அறிவிப்பு

“கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்க்குமாக இருந்தால் எதற்காக அதன் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவ்விடயத்தை நாடாளுமன்றத்தில் பேசினார்?”

– இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா.

இதேவேளை, இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கும் அதேநேரம், பிரதமர் இவ்விடயத்தில் தலையிட்டு சுமுகமான தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் மாவை எம்.பி. வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 5ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதில் எந்தத் தவறும் இல்லை. கல்முனை பிரதேசம் தனியான தமிழ்ப் பிரதேச செயலகமாக மாற்றப்பட வேண்டும் என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் விடயம்.

இந்த விடயத்தில் தமிழ் – முஸ்லிம் மக்கள் மத்தியில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்ற காரணத்தை கருத்தில்கொண்டு நாம் செயற்பட்டு வருகின்றோம்.

ஆனால், துரதிஷ்டவசமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது இவ்விடயத்தில் தவறுதலான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அதற்கு எமது உறுப்பினர் கோடீஸ்வரனும் தனது பதில் கருத்தை முன்வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் பேச வேண்டும் எனக் கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான ஹரீஸ் இவ்விடயத்தை நாடாளுமன்றத்தில் பேசாமல் எம்மிடம் பேசியிருக்கலாம்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது குறித்த பிரச்சினையில் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் தீர்வுகளை எட்டவே நாம் முயற்சிக்கின்றோம்.

இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சு நடத்தி சுமுகமாக தீர்வு காணத் தயாராகவே இருக்கின்றோம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைக் கையாள வேண்டும்.

அடுத்த வாரத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்விடயத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *