‘யானை சவாரிக்கு தயாராகிறது சேவல்’! ‘பட்ஜட்’டை ஆதரித்து பிள்ளையார்சுழி போட்டார் தொண்டா!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ‘பட்ஜட்’டுக்கு ஆதரவாக வாக்களித்தது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று ( 12) மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது பாதீட்டுக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரான மஹிந்த அமரவீர, பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர உட்பட 29 எம்.பிக்கள் வாக்கெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்த்து வாக்களித்திருந்தாலும், அதன் பங்காளிக்கட்சியான இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பியும், முத்து சிவலிங்கம் எம்.பியும் ஆதரவாக வாக்களித்தனர்.

…….

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் இன்று (12)  நிறைவேற்றப்பட்டது.

இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது ‘பட்ஜட்’டுக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்றம் இன்று (12) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர் 10. 20 மணி முதல் பாதீட்டின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் நடைபெற்றது.

ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்ட பின்னர் மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது ஆளும் ஐக்கிய தேசியக்கட்சியும் அதன் பங்காளிக்கட்சிகளும் ஆதரவாக வாக்களித்ததுடன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேசக்கரம் நீட்டியிருந்தது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் , ஜே.வி.பியும் எதிராக வாக்களித்தன. இதன்படி 43 மேலதிக வாக்குகளால் பட்ஜட் நிறைவேறியது.

பட்ஜட்டை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த அணி அறிவித்திருந்தாலும், அவர்களின் முயற்சி பிசுபிசுத்துள்ளது. மைத்திரி அணி உறுப்பினர்கள் சிலர் ( சுதந்திரக்கட்சி) வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்ததாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குழுநிலை விவாதம்

நாளை 13ஆம் திகதி முதல் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தான குழுநிலை விவாதம் (மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் ) நடைபெறவுள்ளது. இதற்கு 19 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 5ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.

குழுநிலை விவாதத்தின்போது திருத்தங்கள் முன்வைக்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *