அறுவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் மாபியாக்களின் சதியா ? அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கேள்வி!

கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென  பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று மாலை (11) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முற்கூட்டியதான தயார் படுத்தும் கூட்டத்தின் போது,  நிகழ்ச்சி நிரலில் புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை மற்றும்  திண்மக்கழிவகற்றல் திட்டம் தொடர்பான விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,

அமைச்சர் ரிஷாட்  அறுவைக்காட்டு குப்பை திட்டத்திற்கு தமது கட்சி  பூரண எதிர்ப்பு எனவும் இது தொடர்பில் தொடர்ந்தும்  பேச்சு நடத்த, பிரதமர் சந்தர்ப்பம் ஒன்று தர வேண்டுமெனவும் கோரினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்திற்கு  இந்த விவகாரத்திற்கு பொறுப்பான அமைச்சர் சம்பிக்க ரணவக்க வராத நிலையிலும் அமைச்சர் றிஷாட்டின் பலத்த எதிர்ப்பு மற்றும் சக அமைச்சர்கள் சிலர் அமைச்சர் றிஷாட்டின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தமை காரணமாக இந்த விவகாரம் இன்று எடுத்துக்கொள்ளப்படவில்லை.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கருத்து தெரிவித்த போது ,

புதிய தொழில் நுட்பங்கள் விரவியுள்ள தற்போதைய கால கட்டத்தில், கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு சென்று நிறைக்க வேண்டிய எந்த தேவையும் அரசுக்கு இல்லை. நாங்கள் இந்த திட்டத்தை ஒரு மாபியாவாகவே பார்க்கின்றோம். அத்துடன் பகிரங்கமாக இதனை எதிர்க்கின்றோம் என்றார்.

சீமெந்து கூட்டுத்தாபனம் எனது அமைச்சின் கீழே வருகின்ற போதும் இன்ஸி சீமெந்து  நிறுவனத்திற்கு 50 வருட குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ள  அறுவக்காட்டு பகுதியில் உள்ள குழிகளை நிரப்புவதற்கான எந்த அனுமதியையும் நாங்கள் வழங்கவில்லை, நான் இந்த அமைச்சு அமைச்சை பொறுப்பேற்பதற்கு முன்னர் சீமெந்து கூட்டுத்தாபனம்5141 ஏக்கர் காணியை 50 வருட குத்தகைக்கு  ஹொல்சிம் லங்கா லிமிட்டட் (தற்போதைய இன்சீ நிறுவனம் ) இற்கு வழங்கியது. அதற்காக அந்த இடத்தை குப்பைகளால் நிரப்ப வேண்டுமென  எந்த தேவையும் இல்லை.

1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 1 இலட்சம் அகதிகளை புத்தளம் பிரதேசமே தாங்கியது,  அகதி மக்களுக்கு இருப்பிட வசதியளித்து , உணவு வழங்கி , வளங்களை பகிர்ந்து கொடுத்த பிரதேசம் புத்தளம்.

நுரைச்சோலை  மின் நிலையத்தை மக்களின்  எதிர்ப்புகளையும் மீறி முன்னைய அரசு கொண்டு வந்தது . எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதென அப்போது உறுதியளிக்கப்பட்ட போதும் தற்போது அங்கு வாழும் மக்கள் தொடர்ச்சியான பேராபத்துடன் வாழ்கை நடத்துகின்றனர்.

 

அது மாத்திரமன்றி அங்கு அமைக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியையும் பிரதமரையும் இந்த ஆட்சியையும் கொண்டு வருவதில்  90 சத வீதமான புத்தளம்  மாவட்ட மக்கள் பங்களிப்பு நல்கினர்.  அவர்களுக்கு இந்த  துரோகம் செய்ய கூடாது.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த  7600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இப்படித்தானா ஒதுக்கப்போகின்றீர்கள்?.

குப்பைகளை மீள் சுழற்சி செய்ய எத்தனையோ நவீன முறைகள் இருக்கும் போது, குப்பைகளை காவிச்சென்று கொட்டுவதற்கு இவ்வளவு தொகைகளை செலவிடுவது ஏன் ? உலகில் எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறையை நீங்கள் அறிமுகப்படுத்துவதன் உள்நோக்கம் தான் என்ன ? இது யாரை திருப்திப்படுத்துவதற்காக என்று அமைச்சர் கேள்வி எழுப்பினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *