நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் கருதி கூட்டமைப்பு – ஜே.வி.பி. இணைந்து செயற்பட இணக்கம்! 

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) இணைந்து செயற்படவுள்ளன என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

கூட்டமைப்பினருக்கும் ஜே.வி.பினருக்கும் இடையிலான சந்திப்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போதே அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது உள்ளிட்ட பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கு இரு தரப்பும் இணங்கியுள்ளன.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜே.வி.பியின் சார்பில் அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் அரசமைப்பின் 20ஆவது உத்தேச திருத்தச் சட்டமூல வரைபுக்கு ஆதரவளிக்குமாறு கோரி அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஜே.வி.பியினர் நடத்திவரும் பேச்சுகளுக்கு அமைய இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு இடம்பெற்ற பின்னர் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதிகாரப் பரவலாக்கத்துக்கு ஆதரவளிக்க ஜே.வி.பி. இணக்கம் வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் இரா.சம்பந்தன் மேலும் கூறுகையில்,

“நாமும் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்) மக்கள் விடுதலை முன்னணியினரும் (ஜே.வி.பியினர்) இன்று சந்தித்துப் பல விடயங்கள் குறித்துப் பேசினோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் ஆழமாகப் பரிசீலித்தோம்.

நாட்டினுடைய எதிர்காலம் எந்தவிதமாக அமையும், நாட்டில் தற்போது நடைபெறுகின்ற நிகழ்வுகள், நாட்டினுடைய எதிர்காலத்தை முறையாக அமைப்பதற்காக நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்ந்தோம்

எமக்கும் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்) ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் சமீபத்தில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகப் பேச்சுகள் நடைபெற்றன. அந்தப் பேச்சுகளின்போது ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறைமையில் ஓர் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதிகாரப் பகிர்வு விடயம் முன்னெடுக்கப்பட வேண்டும், அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் அந்த விடயம் சம்பந்தமாக தற்போது சில கருமங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த விடயங்கள் சம்பந்தமாகவும் நாங்கள் எமது ஜே.வி.பி. சகோதரர்களுக்கு இன்று எடுத்துக்கூறி அவர்களுடைய ஆதரவைக் கோரினோம். அவர்கள் தங்களுடைய ஆதரவை எங்களுக்குத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்கள்.

நாட்டினுடைய எதிர்காலம் கருதியும், நாட்டு மக்களுடைய எதிர்காலம் கருதியும் எமது இரு கட்சிகளும் (கூட்டமைப்பு, ஜே.வி.பி.) ஒருமித்து செயற்பட வேண்டும் என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டோம். அவ்விதமாக நாங்கள் எதிர்காலத்தில் செயற்பட இருக்கின்றோம்” – என்றார்.

இந்தப் பேச்சு தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கும்போது,

“இணைந்து செயற்படக்கூடிய அனைத்துத் துறைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும்கூட நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன் கருதி இணைந்து செயற்பட இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அரசியலில் புதிய மாற்றத்துக்கு அவசியமான முக்கிய பேச்சை இன்று எம்மால் நடத்த முடிந்துள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *