முஸ்லிம்களை பயமுறுத்தும் இனவாதம்!

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் கட்டவிழ்க்கப்படும் அடிப்படைவாதக் கருத்தாடல்கள்,மதத் தீவிரவாதம்,வெளிநாட்டு அமைப்புக்களுடன் முஸ்லிம் இளைஞர்களுக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படும் பரபரப்புக்களால் முஸ்லிம்களை குறிப்பாக தெற்கு முஸ்லிம்களை பீதி பீடி த்துள்ளது.
தனித்த அல்லது சில தனிப்பட்ட இளைஞர்களின் இவ்வாறான “சுடலைஞானங்கள்” நாட்டின் இறைமை,  ஆள்புல எல்லைகளுக்கு எந்த வகையிலும் ஆபத்தை ஏற்படுத்தப் போவதில்லை.
எனினும் துளிர்விடும் முஸ்லிம் அடிப்படைவாதத்தால் நாடு ஆபத்துக்குள் மூழ்வதாக இனவாதிகள் தூக்கிப்பிடிக்கும் பிரச்சாரங்களே முஸ்லிம்களை பயமுறுத்துகிறது.
இந்த ஆபத்தான கட்டத்திலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுக்க, முஸ்லிம் தலைமைகளின் அரசியல் கொள்கைகளிலும் நிதான நிலைப்பாடு தேவைப்படலாமென சமூகத்தின் புத்தி ஜீவிகள்,உலமாக்கள் எச்சரித்துள்ளனர்.
எதிர்வரும் காலங்கள் தேர்தல் மாதங்களாக உள்ளதால் தனித்துவவாதம் (தனியலகு,கரையோர மாவட்டம்) மதவாதம் (பள்ளிவாசல், ஹபாயா, , ஹராம்,ஹலால்) பற்றிய பிரச்சாரங்களையும்,மஹிந்தவுக்கு எதிரான கடும் விமர்சனங்களையும் முஸ்லிம் தலைமைகள் தவிர்ப்பதே,தற்போது ஏற்பட்டு ள்ள முஸ்லிம் அடிப்படைவாதக் கருத்தாடல்களைத் தோற்கடிக்க உதவும்.
இந்தப்போக்கில் இருந்து விலகி தேசப்பற்றை வலியுறுத்தும் அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றும் அரசியல் வெள்ளோட்டங்களை மர்ஹும் அஷ்ரஃப் 1999 இல் தேசிய ஐக்கிய முன்னணியூடாக (நுஆ) முன்னெடுக்க இருந்தார்.
அவரது அரசியல் தீட்சண்யத்தைப் புரிந்து கொள்ள இத்தெளிவான அத்தாட்சி எமக்கு உதவுகிறது.ஆனால் காலம் அவரைக் காவிக் கொண்டு சென்றதால் மூன்று சமூகங்களையும் ஒருங்கிணைத்துச் செல்லும் மர்ஹும்  அஷ்ரஃபின் அரசியல் சிந்தனைகள் கிடப்பில் கிடக்கின்றன.
முஸ்லிம் காங்கிரஸின் தென்கிழக்கு அலகு கோரிக்கை “மூன்று சமூகங்களினதும் முன்மாதிரிப் பூமி” என்றார் அஷ்ரஃப். முஸ்லிம் காங்கிரஸுக்கு நான் பிரியாவிடை கொடுத்து விட்டேன்,
தேசிய ஐக்கிய முன்னணி என்பது “முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பரிணாம வளர்ச்சி” என்றும்,கட்சியின் இறுதிப் பிரசவம் என்றும் அவர் முழக்கமிட்டார்.அஷ்ரஃபின் இந்த அரசியல் நாதங்கள் 1999 இன் அந்திம காலங்களில் கிழக்கில் ஒலித்து நாடு பூராகப் பரவத் தொடங்கியது.
தீகவாபி புனித பூமி விஸ்தரிப்பு தொடர்பில் பௌத்த மத குருவான சோபித தேரருடன் பகிரங்க விவாதத்தில் பங்கேற்ற பின்னர்,தென்னிலங்கை அரசியல் சிந்தனைகள் என்றோ ஒரு நாள் மாற்றமுறும் என்பதை அஷ்ரஃப் உணர்ந்திருந்தார்.
அதிலும் தமிழ் பேசுவோரின் விடுதலைப் போராட்டம் அரச படைகளால் வீழ்த்தப்படுமானால் பேரினவாதம் விழிக்கும் என்பதையும் தேரரின் விவாதங்கள் அஷ்ரஃபுக்கு உணர்த்தியிருந்தன. இதனால் முஸ்லிம் காங்கிரஸுக்கு விடை கொடுத்தனுப்ப அஷ்ரஃப் விழைந்திருப்பார். 
 
அன்று அஷ்ரஃபுக்கு ஏற்பட்ட உதிப்பு இன்று மக்கள் காங்கிரஸ் தலைமைக்கும் ஏற்பட்டுள்ளதா? இதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
பௌத்த மதகுருமார்களுடனான விவாதங்களே இத் தலைமைகளைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும்.இதுவே இந்த ஆய்வின் எனது முடிவாகும்.பௌத்த மதகுருவான ஆனந்த தேரருடனான விவாதம் அமைச்சர் ரிஷாதையும்,சோபித தேரருடனான விவாதம் மர்ஹும் அஷ்ரபையு ம்,தேசப்பற்றுத்தான் சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாக்கும் என்ற சிந்தனைகளைத் தூவியிருக்கலாம்.
எனவே தீகவாபியும், வில்பத்துவும் சிறுபான்மைச் சமூகங்களின் தேசப்பற்றுக்கான சிந்தனை விளைநிலம் என்ற முடிவுக்கு வரலாமா? இதைத் தீர்மானிக்கும் சிந்தனைச் சுதந்திரத்தை நான்,வாசகர்களிடமே விடுகிறேன். 
 
இதற்காக இதற்கு முன்னர் முஸ்லிம்களிடம்  தேசப்பற்று இருக்கவில்லை எனப்பொருள் கொள்ளவும் முடியாது.
இருந்ததை சில அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் அந்நியப் படுத்திற்று.தனியலகு,தனி மாகாணம், தனிச்சமூகம் என்ற கோஷங்கள் தென்னிலங்கையில் வேறு வடிவத்தைக் கொடுத்திருந்தன.
வடக்கில் கொடூர யுத்தம் நிகழ்ந்த நேரங்களில் கிழக்கிலும் ஒரு சமூகத்துக்கு தனித்துவம் தேவைப்படுகிறதே! இதுவே அன்று பெளத்த தேசத்திற்கிருந்த கவலை. வடக்கு, கிழக்கில் சிங்களத் தேசிய கட்சிகள் இருப்பிழந்து,பிராந்திய,பிரிவினைவாதக் கட்சிகள் காலூன்றியதால் பௌத்தத்தின் இந்தக் கவலை இரட்டிப் பாகியது.
ஐக்கிய தேசிய கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி  அமைப்பாளர்கள் வடக்கிலும்,கிழக்கிலும் துரோகிகளாக பட்டம் சூட்டப்பட்டு கருவறுக்கப்பட்டு  விடுதலைப் போராட்டத்தை விறுவிறுப்பூட்டி தென்னிலங்கையை, வெறுப் பூட்டியது.மேலும்  தனித்துவ பிரச்சாரங்களால் வடக்கு,கிழக்கு முழுவதும் மரமும், மயிலும், வீடும்,வீணையும், சூரியனும் சின்னங்களாகி பெரும்பான்மை கட்சிகளின் இருப்புக்கள் இடம் பெயர்ந்துள்ளன. இதைச் சரியாகப் பயன்படுத்தும் மொட்டு அணியினர் சிறுபான்மைக் கட்சிகளை பிரிவினைவாதமாக் காட்டி அரசியல் காய்பறிக்கத் தொடங்கியுள்ளனர். 
 
இதற்கும் மேலாக தமிழீழ வாக்குகளே தன்னைத் தோற்கடித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்து விட்டு அழுதவாறு அலரிமாளிகையை விட்டுச்சென்ற, கண்ணீர்த்துளிகள் தென்னி லங்கை மண்ணில் விழுதாக விழுந்துள்ளன.
இந்த விழுதுகளுக்கு வேராகும் மொட்டு அணியின் நகர்வுகளே சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது.இதனால் தென்னிலங்கையின் கற்பனையிலுள்ள அரபுக் கொலனிகள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு,முஸ்லிம் இளைஞர்களின் ஆயுதப்பயிற்சிகளை அடியோடு கிள்ளி யெறிய மஹிந்தவின் மீள் வருகையையே கடும்போக்கு எதிர்பார்க்கின்றது.
 
இந்த எதிர்பார்ப்புக்களை மெதுவாகக்களையும் போக்கிலிருந்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய பயணம் புறப்படுகிறது. “மக்கள் காங்கிரஸ்” என்ற நாமமும்,போரின் பின்புலங்கள் இக்கட்சியின் தலைமைக்கு புகட்டியுள்ள பாடங்களும் சமூக ஒற்றுமை, தேசப்பற்று,ஆள்புல விசுவாசம்,அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்தி அரசியல் செய்ய வைத்துள்ளது.
இதனால் பிரபாகரன் நடந்த மண்ணில்,முகாம்கள் முளைத்திருந்த ஈழத்தின் மூலையில் மக்கள் காங்கிரஸின் தலைமை ராஜபவனி வருகிறது.துப்பாக்கி ஏந்திய கைகளுக்கு புத்தகப்பைகள்,குண்டுகள் சுமந்த சிறுவர்களுக்கு,குடி நீர்ப் போத்தல்கள்,பங்கருக்குள் பதுங்கியிருந்த பிள்ளைகளுக்கு பாடசாலைகள்,கூடாரங்களில் வாழ்ந்தோருக்கு கல்வீடுகள் என மக்கள் காங்கிரஸின் மனசு விரிந்து சேவைகள் வியாபிக்கின்றன. 
 
இத்தனைக்கும் முன்னாள் போராளிகள் பலர் இக்கட்சியில் உள்ளூராட்சி உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை பிரிவினைவாதம் மெல்ல நகர்வதற்கான அடையாளங்களே. மன்னார் மாந்தை மேற்கு, முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைகள் வெல்லப்பட்டது மட்டுமன்றி முன்னாள் புலிகளின் முக்கியஸ்தர்கள், ஜனநாயகத் தலைவர்களாகியுள்ளனர்.
 
ஒரு காலத்தில் தம்பி (பிரபாகரன்) நடந்த மண்ணில் இன்று தேசப்பற்றும,ஜனநாயகமும் விளைகின்றது.வடமாகாண சபையில்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கிடைத்த சிங்களப் பிரதிநிதித்துவமும், வடக்கிலுள்ள பிரதான இந்து, கத்தோலிக்க பாடசாலைகளின் நிகழ்வுகளில் இத்தலைமை பிரதம அதிதியாக அழைக்கப்படுவதும் சமூக இணக்கத் தலைமையாக இக்கட்சி அடையாளம் காணப்படுகிறதா?
இதுவும் வாசகர்களின் சிந்தனைச் சுதந்திரத் திற்கு உட்பட்டதே! எனது ஆதங்கம் இதுவல்ல. சிறுபான்மை சமூகங்களின் தேசப்பற்றும்,  மொட்டு அணியினரின்   மௌட்டீகப் பிரச்சாரங்களும்  தமிழ் மொழிச் சமூகத்தின்  நீண்ட கால அரசியல் அபிலாஷைகளைப் பாதிக்குமா?  என்பதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *