‘1000’ துரோகம் ! பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – திலகர் எம்.பி. வலியுறுத்து

கூட்டு ஒப்பந்தத்தில் அரசாங்கமும் ஒருதரப்பாக இருக்கும் வகையில் இந்தப் பொறிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அழுத்தம் கொடுத்துவந்தது.

ஆனால், அரசாங்கம் அதற்கான உரிய பதிலை அளித்திருந்திராத சூழ்நிலையில், நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த அடிப்படையில் மத்தியஸ்தம் வகித்தார் என்பதை பகிரங்கமாக தெளிவுப்படுத்த வேண்டுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் எம்.பி. வலியுறுத்தினார்.

1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை தொடர்ச்சியாக தொழிலாளர்கள் முன்வைத்துவரும் சூழ்நிலையில் வெறும் 700 ரூபா அடிப்படை சம்பளத்துடன் கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு பாத்திரமாக மத்தியஸ்தம் வகித்திருந்தார். இது குறித்து  திலகராஜ் எம்.பியிடம் வினவிய போதே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

தோல்விகண்டுள்ள கூட்டு ஒப்பந்த பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்றில் தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுத்துவருகிறது.

கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற விவாதத்தின் போதும் கூட்டு ஒப்பந்த பொறிமுறையில் அரசாங்கமும் பிரதான மத்தியஸ்தம் வகிக்கும் வகையில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பகிரங்கமாக அறிவித்திருந்தோம்.

என்றாலும், அதற்கான உரிய பதிலை பிரதமரோ அல்லது அரசோ அளித்திருக்கவில்லை. தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அரசின் பிரதான பங்காளிக் கட்சியாகவுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது. எம்மிடம் இது குறித்து எவ்வித பேச்சுகளும் இடம்பெற்றிருக்கவில்லை. அங்கு அரசும் ஒரு பிரதான பாத்திரத்தை வகித்துள்ளது.

அது எந்த அடிப்படையில் என்ற காரணத்தை பிரதமர் எமக்கு பகிரங்கமாக தெளிவுப்படுத்த வேண்டும். உரிய பதிலை பிரதமர் அளிக்காவிடின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து நாங்கள் காத்திரமான முடிவுகளை எடுக்கவுள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *