தொழிலாளர்கள் காட்டிக்கொடுப்பு! ரூ. 700 ஐ ஏற்கமுடியாது!! – ‘ஒருமி’ அமைப்பு கண்டனம்

” பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு வழமைபோல் இம்முறையும் கூட்டுஒப்பந்தத்தின் ஊடாக பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று மலையக சிவில் அமைப்புகளின் ஒன்றியமான ‘ஒருமி’ குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிக்கைக்கு செவிமடுக்காமல் தன்னிச்சையான முறையில் எதிர்வரும் திங்கட்கிழமை செய்துகொள்ளப்படவுள்ள திருட்டு உடன்படிக்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்கமாட்டோம்.

தோட்டத்தொழிலாளர்கள் அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவை கோரும் நிலையில், அவர்களிடம் எவ்வித கருத்தும் கோராமல், ஆலோசனை பெறாமல் எவ்வாறு அடைப்படைச் சம்பளமாக 700 ரூபாவை நிர்ணயிக்க முடியும்?

இது அப்பட்டமான காட்டிக்கொடுப்பு செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். பல்லாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உரிமை மறுக்கப்படக்கூடாது.
எனவே, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உத்தேசித்துள்ள தொழிற்சங்கங்கள் தமது நிலைப்பாட்டை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படும் என எதிர்ப்பார்க்கபடும் கூட்டு ஒப்பந்தமானது அடிமை சாசனமாக மாறிவிடும்.

2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் அடிப்படை சம்பளம் 500 ரூபா உட்பட நாட் சம்பளமாக சுமார் 805 ரூபா கிடைத்தது.

இம்முறை அடிப்படை சம்பளம் 200 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது என தொழிற்சங்கங்கள் மார்தட்டுகின்றன. ஆனால், மொத்த சம்பளத்தை எடுத்தால் தேரியமீதி 855 ரூபாவாகவே காணப்படுகின்றது. ஆகமொத்தத்தில் 50 ரூபாவுக்கும் குறைவான சம்பள உயர்வே கிடைத்துள்ளது.

எனவே, வெட்டிக்கொத்தி உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சம்பள சூத்திரத்தை, உயரவை நிராகரிக்கின்றோம். தோட்டத் தொழிலாளர்களுக்கு நிதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும். இது விடயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்பது ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும்.” என்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *