கூட்டு ஒப்பந்தம்: ஜனவரி 31ஆம் திகதி வரை கம்பனிகளுக்கு காலக்கெடு! – தொழில் அமைச்சர் அதிரடி

“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தப் பேச்சில் இம்மாத இறுதிக்குள் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் துறைசார் அமைச்சர் என்ற வகையில் எனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பேன்.”

– இவ்வாறு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2015ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியொன்றிலேயே வாக்குவேட்டைக்காக பிரதான தொழிற்சங்கமொன்றால் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனால் பெரும் குழப்பநிலை உருவானது.

2015இல் கைச்சாத்திடப்பட வேண்டிய உடன்படிக்கை 2016 ஜுன் மாதமளவிலேயே கைச்சாத்திடப்பட்டது. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தால் குறித்த ஆண்டில் நவம்பர் மாதமே வெளியிடப்பட்டது.

இதன்படி 2018ஆம் ஆண்டில் குறித்த ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொள்வதற்குரிய பேச்சுகள் ஆரம்பமாகின. இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இறுதிக்கட்டத்தை அடைந்த வேளையில்தான் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

அதன்பின்னரும் பேச்சுகள் நடத்தப்பட்டிருந்தாலும் தீர்வு முன்வைக்கப்படவில்லை.

நாள் சம்பளத்துக்கும், அடிப்படை நாள் சம்பளத்துக்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றது. தொழிலாளர்கள் அடிப்படை நாள் சம்பளத்தையே ஆயிரம் ரூபாவாக்குமாறு கோருகின்றனர்.

பெருந்தோட்டத்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவன் நான். தொழிற்சங்கத்திலும் பதவி வகித்துள்ளேன். எனவே, தொழிலாளர்களுக்கு ஆயிரம் அல்ல 1500 ரூபா கிடைத்தால்கூட நான் மகிழ்ச்சியடைவேன்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் நாளையும் (25) பேச்சு நடைபெறவுள்ளது. அதன்போது நான் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளேன்.

அதாவது, சம்பளப் பிரச்சினை குறித்து இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அல்லது இம்மாதம் முடிவடைவதற்குள் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் துறைசார் அமைச்சர் என்ற வகையில் அதில் தலையிட்டு, அதிகாரங்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு நீதியான தீர்வை[ப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *