சகல தகுதியும் எனக்குண்டு; களமிறங்க நானும் தயார்! தினேஷ் அதிரடி; ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த அணியினருக்குள் வலுக்கின்றது மோதல்

“ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க அனைத்துத் தகுதிகளையும் நான் கொண்டுள்ளேன். நானும் போட்டியிடத் தயாராகவே உள்ளேன்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன.

“கட்சியின் தலைமை அனுமதித்தால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டுக் காட்டுவேன்” எனவும் அவர் சவால் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக கோட்டாபாய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, தினேஷ் குணவர்தன, சமல் ராஜபக்ச ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன எனவும், இவர்களில் பிரபலமானவர்கள் யாரோ அவரே தகுதி பெறுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் வினவியபோதே தினேஷ் குணவர்தன எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே இந்த விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணி எனப் பல கட்சிகளின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்தக் கூட்டணி பிளவுபடாத வகையில்தான் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

வேட்பாளர்களாகப் பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதில் எனது பெயரும் இருப்பது உண்மைதான். நான் தகுதியுடையவன் என்றபடியால்தான் எனது பெயரையும் கட்சியின் தலைமை பரிசீலித்துள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *