மைத்திரியின் ‘பிலிப்பைன்ஸ் உரை’யால் வெடிக்கிறது புதிய சர்ச்சை!

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி   றொட்றிகோ டுரேர்ரே நடத்தி வரும் போரை வரவேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது உலகிற்கு முன்உதாரணம் என்றும் மெச்சியுள்ளார்.

பிலிப்பைன்சுக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்றிகோ டுரேர்ரேயுடன் இணைந்து நடத்திய நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

“குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக நீங்கள் முன்னெடுக்கும் போர், உலகிற்கு முன்உதாரணம். தனிப்பட்ட முறையில் நான் அதனை வரவேற்கிறேன்.

போதைப்பொருள் பாவனை எனது நாட்டுக்கும், அச்சுறுத்தலாக உள்ளது. இந்த தீங்கைக் கட்டுப்படுத்த உங்கள் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறியிருந்தார்.

போதைப்பொருளுக்கு எதிராக பிலிப்பைன்சில் ஜனாதிபதி றொட்றிகோ டுரேர்ரே ஈவிரக்கமற்ற போரை முன்னெடுத்து வருகிறார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்பாக தேடுதல்கள், சோதனைகள் நடத்துவதற்கும் , கைது செய்வதற்கும், காவல்துறைக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு, போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக 5,000 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது 20,000 பேருக்கு அதிகம் என்று மனித உரிமை செயற்பட்டாளர்கள் கூறுகின்றனர்.

பிலிப்பைன்ஸ் காவல்துறை மேற்கொள்ளும் சட்டத்துக்குப் புறம்பான இந்த படுகொலைகள் குறித்து, அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் பிலிப்பைன்சின் வழிமுறையை தானும் பின்பற்றப் போவதாக ஜனாதிபதி கூறியிருப்பது, அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

இலங்கையில் கடுமையான போதைப் பொருள் குற்றச்சாட்டுகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருந்தார்.

அவரது அந்த அறிவிப்புக்கு அனைத்துலக அளவில் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் அணுகுமுறை மனித குலத்துக்கு  எதிரான மோசமான குற்றம் என்று விமர்சித்துள்ள அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும், இதனை ஆசிய தலைவர்கள் பின்பற்றக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, உடனடியாக ஜனாதிபதியின் பேச்சாளர் பதிலளிக்கவில்லை.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கிறேம் முகாம் (Camp Crame) என அழைக்கப்படும்  பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தலைமையகத்துக்கு செல்லவுள்ளார்.

இங்கு ஜனாதிபதிக்கு அரசுமுறை மரியாதை அளிக்கப்படும் என்று பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு அரசுத் தலைவர் ஒருவருக்கு, பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தலைமையகத்தினால் இதுபோன்ற மரியாதை அளிக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் கிறேம் முகாமின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இங்கு, இலங்கை ஜனாதிபதிக்கு போதைப் பொருள் குற்றங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விரிவான விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளன.

போதைப்பொருள் குற்றங்களை தடுக்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் வழியை பின்பற்றப் போவதாக அறிவித்த இலங்கை ஜனாதிபதி , பிலிப்பைன்சில் போதைப்பொருள் குற்றங்களை தடுப்பதற்கு ஈவிரக்கமற்ற குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படும் பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தலைமையகத்துக்கு செல்வது இன்னும் கடுமையான எதிர்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *