குட்டி யானைகளை அடக்க அங்குசத்தை கையிலெடுக்கிறார் ரணில்

ஐ.தே.கவின் பின்வரிசை  எம்.பிக்கள்  சிலரின் செயற்பாட்டால் கட்சி தலைமை கடும்  அதிருப்தியில் இருப்பதாக  அறியமுடிகின்றது.

ஜனாதிபதியின் ஆட்சிக்கிவிழ்ப்பு சூழ்ச்சியை தோற்கடித்து, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளவேளை, கட்சிக்குள்  பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் பின்வரிசை எம்.பிக்கள் செயற்படுவதானது, வெற்றிப்பயணத்துக்கு பெரும் தடையாக அமையுமென  மூத்த உறுப்பினர்கள் சிலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ.தே.கவின் நாடாளுமன்றக்குழுக்கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தலைமையில் நாடாளுமன்றக்கட்டத் தொகுதியில் நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்திலேயே பின்வரிசை எம்.பிக்கள் சிலர், தமக்கு பிரதி அமைச்சுப் பதவி வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் அரசியல் தீர்மானம் எடுக்க நேரிடும் என்றும் கடுந்தொனியில் குறிப்பிட்டதுடன்,

தேசியப்பட்டியல் எம்.பிக்களிடமிருந்து அமைச்சுப் பதவிகளை பறிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

சினம்கொண்டெழுந்த பின்வரிசை எம்.பிக்களை சமரசப்படுத்தும் முயற்சியில் மலிக்விக்கிரமசிங்க இறங்கினார்.

‘’ உம்மால்தான் இவ்வளவு பிரச்சினையும். நீர்தான் முதலில் விலகவேண்டும்’’ என அடிக்காத குறையாக பின்வரிசை எம்.பியொருவர் மலிக்கை திட்டித் தீர்த்ததாக தகவல். இதனால், குழுக்கூட்டத்தில் கடும் அமளிதுமளி ஏற்பட்டது.

இவற்றை கண்ட ரணில் விக்கிரமசிங்க, அமைதி பேணுமாறு உரத்தக் குரலில் குழுப்பத்தில் ஈடுபட்டவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதையடுத்து பின்வரிசை எம்.பிக்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கட்சி தவிசாளர் கபீர் ஹாசீம் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் கூட்டமொன்று அடுத்தவாரம் நடைபெறவுள்ளது.

ஐ.தே.கவின் 7 இளம் எம்.பிக்களே இவ்வாறு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்களில் சிலருக்கு விரைவில் ஏதேனும் ஒரு துறையில் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, குறித்த எம்.பிக்களின்  கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் கட்சியின் புலனாய்வாளர்களிடம் பிரதமர் விசேட அறிக்கையொன்றை கோரியுள்ளார் என்பதுதான் ‘லேட்டஸ்’ தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *