அரசியல் கைதிககள் விவகாரம்: நாடாளுமன்றில் விரைவில் தீர்வு! – முல்லைத்தீவில் தலதா தெரிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் நேரடியாக இன்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் கோரிக்கை தொடர்பில் எந்தவொரு பதிலையும் வழங்காது அமைச்சர் தலதா அத்துகோரல நழுவிச் சென்றார்.

எனினும், “அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு முடிவு விரைவில் எட்டப்படும்” என்று ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் தலதா தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வடக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 10 ஆயிரத்து 118 குடும்பங்களைச் சேர்ந்த 32 ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்துடன், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 490 குடும்பங்களுக்கு தேவையான உதவி பொருட்களையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும், அந்த நிகழ்வில் உரையாற்றிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரல நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் கோரிக்கை தொடர்பில் எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், நிகழ்வின் நிறைவில் ஊடகவியலாளர்கள் நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த அவர்,

“அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கதைத்துள்ளேன். அங்கு ஒரு முடிவு விரைவில் எட்டப்படும்” என்று பதிலளித்து விட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *