தனிக்கட்சி அரசியலை ஐ.தே.க. கைவிடவேண்டும்! – வேலுகுமார் எம்.பி. வலியுறுத்து

’ தனிக்கட்சி அரசியலைக் கைவிடுத்து தோழமைக் கட்சிகளையும் அரவணைத்து செல்லும் வகையிலேயே ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் பயணம் இனி அமையவேண்டும். அப்போதுதான் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணி அர்த்தமுள்ளதாகவும், நீடித்து நிலைக்ககூடியதாகவும் அமையும்.’’  என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டி திகனையில் நேற்று நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘’ நாட்டில் அரசியல் நெருக்கடி தலைதூக்கியபோது, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மஹிந்த அணியால், எம்.பிக்களின் தலைக்கு கோடி கணக்கில் விலைநிர்ணயிக்கப்பட்டது. பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு ஐ.தே.க. எம்.பிக்கள் சிலர் துரோகத்துக்கு துணைபோனார்கள்.

எனினும், பங்காளிக்கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு இரவு – பகல் பாராது கடுமையாக உழைத்தனர். ஜனநாயகத்தின் பக்கம்நின்ற ஐ.தே.க. எம்.பிக்களுடன் இணைந்து நீதிக்காக குரல்  எழுப்பினர்.

ஜனநாயகமா? பணநாயகமா என்ற தேர்வில் மக்கள் ஆணைக்கு மதிப்பதித்து ஜனநாயகத்தின் பக்கம் நாம் நின்றோம். அன்று எம்மிடம் கொஞ்சிபேசிய ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலர், அமைச்சரான பின்னர் , எம்மை மறந்துவிடக்கூடாது. அத்துடன், ஐ.தே.க. அல்லாத உறுப்பினர்கள் எதையும் கெஞ்சிதான் பெறவேண்டும் என  நினைத்துவிடக்கூடாது.

கட்சி அரசியலுக்கு அப்பால் , நாட்டில் நல்லாட்சி மலரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் ஐக்கிய தேசியக்கட்சிக்கு மக்கள் வாக்களித்தனர். எனவே, மக்கள் ஆணையைமீறும் வகையில் புதிய அரசு செயற்படக்கூடாது.

ஐக்கிய தேசியக்கட்சியால் அதன் பங்காளிக்கட்சிகளுக்கு எதுவும் செய்யப்படவில்லை என நான் கூறமுற்படவில்லை. இன்னும் பல விடயங்கள் செய்யவேண்டியுள்ளன என்பதையே வலியுறுத்திக்கூறுகின்றேன். எல்லாம் நடந்து முடிந்த பின்னர் ஓலமிடுவதைவிட, முன்னெச்சரிக்கை விடுத்து, உஷார் படுத்துவதே இராஜதந்திர அரசியலாகும். அதையே நான் செய்துவருகின்றேன்.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அமைச்சரவை மற்றும் இராஜாங்க, பிரதியமைச்சுகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. தனியாட்சி அமையும் பட்சத்தில் அமைச்சரவை எண்ணிக்கை 30 ஐயும், ஏனைய அமைச்சுகளின் எண்ணிக்கை 40 ஐயும் விஞ்சுதலாகாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

 எனவே, அமைச்சர்களின் எண்ணிக்கையை தூக்கிப்பிடித்து அது பற்றியே பேசினால் அரசாங்கம்மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும். ஆகவே, எஞ்சியுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு கடந்தகாலத்தைவிட சிறப்பான சேவைகள் வழங்கப்படவேண்டும்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உட்பட மலையக மக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவேண்டும். எவ்வித பாகுபாடுமின்றி தொகுதிகளுக்குரிய நிதி ஒதுக்கப்படவேண்டும். கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் அரசியலை மையப்படுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கடுமையான அரசியல் தீர்மானங்களை எடுக்கநேரிடும்.’’ என்றார் வேலுகுமார் எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *