பேஸ்புக்கில் நிதி திரட்டி செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்ற தம்பதி

தாங்கள் உறுப்பினராக இருக்கும்  பேஸ்புக் குழுவொன்றில் நிதி திரட்டி அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு செயற்கை கருவூட்டல் மூலம் பிரிட்டனை சேர்ந்த தம்பதியினர் குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளும்போது சந்தித்துக்கொண்ட 26 வயதாகும் மரிஷா சாப்ளின் மற்றும் 29 வயதாகும் ஜான் ஹிப்ஸ் ஆகியோர் செயற்கை கருவூட்டல் முறையின் மூலம் ஏற்கனவே பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தனர்.

இந்நிலையில், இரண்டாவது குழந்தை ஒன்றை பெற்றெடுக்க நினைத்த இந்த தம்பதியினருக்கு மீண்டும் செயற்கை கருவூட்டல் செய்வதற்குரிய பணத்தை திரட்ட முடியவில்லை.

இதுகுறித்து கேள்விப்பட்ட  பேஸ்புக் குழுவொன்றை சேர்ந்த தாய்மார்கள், எவ்வித தகவலுமின்றி 2,000 பவுண்டுகளை திரட்டி இந்த தம்பதியினருக்கு அளித்தனர். நிதி உதவி செய்தவர்கள் யாருக்குமே இந்த தம்பதியினரை முன்பின் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  பேஸ்புக் மூலம் திரட்டப்பட்ட நிதியின் மூலம் கர்ப்பம் தரித்த சாப்ளினுக்கு கடந்த சனிக்கிழமை அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்தது.

பிரிட்டனின் நாட்டிங்ஹாம்ஷையர் பகுதியை சேர்ந்த இந்த தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறந்த செய்தியை உடனடியாக நிதியுதவி அளித்த  பேஸ்புக் குழுவினருக்கு தெரிவித்ததாக கூறினர்,

கடந்த சனிக்கிழமை குழந்தை பிறப்பதற்கு முன்னதாக அளிக்கப்பட்ட மருந்துகளின் வீரியம் குறைய ஆரம்பித்தவுடனேயே எனக்கு குழந்தை பிறந்துள்ளதாக நிதியுதவி அளித்த  பேஸ்புக் குழுவினருக்கு குறுஞ்செய்தி செய்தேன்” என்று சாப்ளின் கூறுகிறார்.

“இது உண்மையாகவே நாங்கள் நினைத்ததை விட அருமையான உணர்வை அளிக்கிறது. எங்களது கனவு இந்த வகையில் நிறைவேறும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.”

தற்போது இரண்டரை வயதாகும் தங்களது முதல் குழந்தை, “தனது சகோதரியை மிகவும் விரும்புகிறாள்” என்றும் தங்களுக்கு நிதியுதவி அளித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு சாப்ளின் புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற்றுக்கொண்டிருக்கும்போது அதே மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்திருந்தார் ஹிப்ஸ்.

ஹிப்சை பார்த்தவுடனேயே பிடித்துப்போன சாப்ளின், மின்னஞ்சல் மூலமாக தங்களது உறவை தொடர்ந்தார்.

புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற்றுவந்த சாப்ளின் இயற்கையான முறையில் கருத்தரிப்பது கடினமானது என்பதால் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு 16 வயதிலிருந்தே முயற்சித்து வந்ததாக கூறுகின்றனர்.

“எனக்கு 16 வயதிருக்கும்போது, ‘உனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ளதென்றால் அதற்காக கூடிய விரைவில் முயற்சி செய்’ என்று மகப்பேறு மருத்துவர் கூறினார்.”

சாப்ளினுக்கு 23 வயதிருக்கும்போது, கொடையாளரிடமிருந்து கருமுட்டைகளை பெற்று கருத்தரித்து, கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் ஈவியை பெற்றெடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து, ஏவி பிறந்த அதே மாதத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்களின் “மே பேபிஸ் 2016” என்ற குழுவில் சாப்ளின் இணைந்தார்.

கடந்த ஜூலை மாதம் 2000 பவுண்டுகளை திரட்டியவுடன், அந்த ஃபேஸ்புக் குழுவை சேர்ந்தவர்கள் இந்த தம்பதியினருக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் காணொளி ஒன்றை தயாரித்து அதை ஃபேஸ்புக் நேரலையில் வெளியிட்டனர்.

நிதி திரட்டலை பற்றி அதில் தெரிவிப்பதற்கு முன்னதாகவே, அந்த காணொளியை பார்த்த சாப்ளின் அழத்தொடங்கிவிட்டார்.

சாப்ளின் முதல் முறையாக கருத்தரிக்கும்போது உருவான கருமுட்டைகளை வங்கியில் பாதுகாத்ததால், இந்த முறை அதில் மீதமிருந்த கருமுட்டைகளே பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஈவியும், இஸ்லாவும் மரபணுரீதியாகவும் சகோதரிகள் ஆவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *