ஐக்கியத்துக்கு வழிவகுத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! – பாராட்டுகின்றார் கிரியெல்ல

அரசமைப்பை பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்ட விதமானது ஐக்கியத்துக்கு வழிவகுத்துள்ளது என அரச தொழில் முயற்சியான்மை, மத்திய மலைநாட்டு மரபு மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் நேற்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்.

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து அரசில் இணைய இன்னுமொரு தரப்பினர் வருகை தரவுள்ளனர்.

தற்போது எமது அரசுடன் இணைந்து கொண்டவர்களும் அமைச்சுப் பதவிகளை எதிர்ப்பார்த்து இணைந்துகொள்ளவில்லை.

எம்முடன் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்வதற்காகவே அவர்கள் வந்தார்கள்.

இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை.

எவ்வாறாயினும், தற்போது நாட்டு மக்களுக்கு அரசமைப்பு தொடர்பில் சிறந்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களினால், ஒருமுறையேனும் அரசமைப்பை மக்கள் வாசித்திருப்பார்கள்.

இவ்வாறான நிலையில், அமைச்சுக்களுக்கான பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பது பிரதமருக்கு உரிய கடப்பாடு என்றும், அதனை இறுதி செய்யும் கடமை ஜனாதிபதிக்கு உரியது என்றும் மக்கள் அறிந்திருப்பார்கள்.

இவர்கள், இருவரும் ஒன்றிணைந்துதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார்கள்.

அத்தோடு, இன்று சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரிக்குக்கூட இவற்றில் தலையிடும் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டவாக்கம், நீதி மற்றும் நிறைவேற்றுத் துறைக்குச் சமமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், எமது அரசு உறுதியான பயணத்தை எதிர்க்காலத்திலும் மேற்கொள்ளும் என்பதை நான் கூறிக்கொள்கிறேன்.

வரவு – செலவுத் திட்டத்தைப் பொறுத்தவரை, மக்கள் எதிர்பாராத சலுகைகளை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்.

இன்று நாட்டில் ஒரு எதிர்க்கட்சித் தலைவர்தான் இருக்கின்றார். மஹிந்த தரப்பினர் வேறு கட்சிக்குச் சென்றுள்ளமையால், அவர்களுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை தானாகவே இரத்துச் செய்யப்படும்.

இது தொடர்பில் நீதிமன்றைக்கூட நாட வேண்டிய தேவை கிடையாது. எனவே, சபாநாயகர்தான் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கவேண்டும்.

அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெற்குக் கட்சியொன்றுடன் இணைந்து செயற்படுவதை முக்கியமான ஒன்றாகக் கருதவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் இவ்வாறான ஒரு கொள்கையில் இருக்கவில்லை. தற்போது, அவ்வாறு இல்லை.

நாடாளுமன்றில் அவர்கள் முழுமையாக நாட்டின் அரசமைப்பைப் பாதுகாத்தார்கள். நாட்டின் ஐக்கியத்துக்கும் இது முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகின்றது.

இவ்வாறான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டை நாம் முழுமையாக வரவேற்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *