தடைகளைத் தகர்த்தெறிந்து ரணிலைப் பதவி ஏற்றுவோம்! – ரவி திட்டவட்டம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமல்ல எவர் தடைகள் ஏற்படுத்தினாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவோம். அவருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடன் தீர்மானத்தை நிறைவேற்றுவோம்.”

– இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க.

வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்க சர்வதேச சமூகம் களத்தில் இறங்கியுள்ளது என மைத்திரி – மஹிந்த அணியினர் கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுள்ளனர்.

சர்வதேச சமூகத்தின் மனதை வெல்லத் தெரியாது நாட்டு மக்களை வதைத்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு 2015ஆம் ஆண்டு நாங்கள் முடிவு கட்டிவிட்டோம். மீண்டும் அந்த ஆட்சி இந்த நாட்டில் அரங்கேற நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதை ஜனாதிபதி மைத்திரிக்குப் பல தடவைகள் நாம் புரியவைத்துள்ளோம். நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதற்குச் சான்றாக உள்ளன” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *