ஐ.தே.கவின் திட்டத்தை முறியடிக்க மாற்று வியூகம் வகுக்கும் மைத்திரி! – மஹிந்தவுக்கு மீண்டும் முடி சூட்டுவதிலேயே ஆர்வம்

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் புதிய அரசை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடாளுமன்ற கலைப்புக்கு சாதகமாக வந்தால், அடுத்த பொதுத்தேர்தல் வரை மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிப்பார் என்று கூறப்படுகின்றது.

அதேவேளை, வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசு ஒன்றை அமைப்பது குறித்தும் பல்வேறு மட்டங்களிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடனும் ஆலோசனைகளை நடத்தியிருந்தார்.

அதேவேளை மஹிந்த ராஜபக்ஷவும் கடந்த சில நாட்களாக, எதிர்த்தரப்பைச் சேர்ந்த பலருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் ஏதாவது ஓர் அரசை அமைத்து, தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்க்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி இருக்கின்றார்.

இடைக்கால அரசை அல்லது, அனைத்துக் கட்சி அரசை அமைத்து இந்த நெருக்கடியைத் தீர்ப்பதிலேயே அவர் கவனம் செலுத்தி வருகின்றார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு தமக்கு சாதகமாக வந்தால், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வரும் நிலையிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு மாற்றான திட்டங்களை ஆலோசித்து வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *