விடுதலை வீரர்களை நினைவுகூர்வதை எந்த எதிர்ப்பினாலுமே தடுக்கமுடியாது! – வடக்கின் முன்னாள் முதல்வர் அறிவிப்பு

“தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக உயிர் நீத்த எமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் எமது மக்களின் உணர்வை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அவ்வாறு எதிர்ப்பவர்கள் எம் மக்கள் மனதில் மேலும் மேலும் உறுதியையும் சுதந்திர தாகத்தையும் மேலெழுச் செய்கின்றார்கள்.”

– இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது:-

“உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளைப் புராதன கிரேக்கர் காலம் முதல் இன்று உலகில் இடம்பெறும் போர்க் காலங்களின் போதும் அதன் பின்னரும் காண முடியும். விடுதலை வீரர்களை நினைவு கூருவது அவரவர் சார்ந்த சமூகங்களின் கடமை.

இன்றைய மனித நாகரிகத்தின் முக்கியமான ஒரு பண்பாக இது காணப்படுகிறது. முரண்பாடுகளுக்கான தீர்வு கோட்பாடுகளிலும் போர்களில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நினைவுகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் தமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் உரிமைக்கு எதிராகத் தெற்கில் கடும் எதிர்ப்பு வெளியிடப்படும் துர்பாக்கிய நிலமை இன்று காணப்படுகிறது. போரில் உயிர் நீத்த தமது பிள்ளைகளைத் தாய் தந்தையர் நினைவு கூர்ந்து அழுவதையோ, தமது உடன்பிறப்புக்களைச் சகோதரங்கள் நினைவு கூர்ந்து தேற்றிக்கொள்வதையோகூட சகித்துக்கொள்ள முடியாத தெற்கின் இழி மனோநிலையை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும்.

அமைதியான வழியில் உரிய வழிமுறைகளை பின்பற்றி எமது மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன். எமது மக்கள் சுதந்திரமாகவும் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது துயில் கொள்ளும் உள்ளங்கள் எமது மக்களின் மனங்களில் எப்பொழுதுமே வாழ்ந்துகொண்டிருப்பர்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *