செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க செயற்கை கோள் தரை இறங்கியது – ‘நாசா’ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் 6 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கடந்த 1997-ம் ஆண்டு ‘நீர்’ ஆதாரத்தை கண்டறிய ‘யத்பைண்டர்’ என்ற விண்கலத்தை அனுப்பியது.

2003-ம் ஆண்டில் ‘பீகிள் 2’ என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. 2004-ம் ஆண்டில் ‘ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது அங்கு தரை இறங்கி நீர் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தின் உள் பகுதியில் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள ‘இன்சைட்’ என்ற செயற்கைக் கோளை அனுப்பியுள்ளது. இது ரூ.7400 கோடி செலவில் உருவாக்கப்பட்டது.

கடந்த மே 5-ந் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அது 6 மாதங்களாக பயணம் மேற்கொண்டது.

50 கோடி கி.மீ. தூரம் கடுமையான பயணத்துக்கு பிறகு இன்று இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு தரை இறங்கியது.

அப்போது கடுமையான புழுதி புயல் வீசியது. இருந்தும் மிக பாதுகாப்பாக இன்சைட் செயற்கை கோள் தரை இறக்கப்பட்டது. அதை தொடர்ந்து முதல் போட்டோவை பூமிக்கு அனுப்பியது.

புழுதி புயல் காரணமாக இந்த போட்டோ தெளிவாக இல்லை. அதன் பின்னர் செவ்வாயின் மேற்பரப்பு போட்டோ பூமிக்கு வந்தது. அது மிக தெளிவாக இருந்தது.

‘இன்சைட்’ செயற்கை கோள் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியதும் கலிபோர்னியாவில் உள்ள ஜெட் புரோபுல்சன் ஆய்வகத்தில் இருந்த விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். இந்த ஆய்வகத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் பிரைடைன்ஸ்டைன் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறினார். இது ஒரு ‘அதிசயிக்கத்தக்க நாள்’ என வாழ்த்தினார்.
இன்சைட்’ செயற்கை கோள் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்ப நிலை, அதன் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும். அத்துடன் தண்ணீர் இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆராயும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *