நோபல், பரிசு வழங்க சொத்துகளைத் தானமாகக் கொடுத்த தினம் இன்று!

மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்க  தனது சொத்துகளை இன்றைய தினத்தில்தான் (நவம்பர் 27)  ஆல்ஃபிரெட் நோபல் அளித்தார். இவர் சர்வதேச அளவில் 350 காப்புரிமைகளைப் பெற்றார். சுமார்  90 ஆயுதத் தொழிற்சாலைகளை நிறுவினார்.

 

ருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசு வழங்குவதற்காக ஆல்ஃபிரெட் நோபல் என்பவர் தனது சொத்துகளை இதே நாளில்தான் (நவம்பர் 27) பரிசாக வழங்கினார்.

உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் நோபல் பரிசை உருவாக்கியவர் `டைனமைட்’ என்ற வெடிபொருளைக்  கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டு அறிவியல் அறிஞர் ஆல்ஃபிரெட் நோபல். 1833 -ம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் பிறந்த இவரின் தந்தை ஒரு பொறியாளர். அவரும் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராவார். பிரபல தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்ற நோபல், தன் தந்தையுடன் சேர்ந்து  இயந்திரக் கருவிகளைக் தயாரிக்கும் பிரிவில் பணியாற்றி வந்தார்.

அமெரிக்காவில் ஏராளமான வேதியியல் ஆய்வுகளையும் மேற்கொண்டு வந்தார், நோபல். குறிப்பாக வெடிபொருள்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். இவர் நைட்ரோகிளிசரின் உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டியதன் விளைவாக 1863-ம் ஆண்டு வெடி மருந்தைக் கண்டுபிடித்தார். நைட்ரோகிளிசரினைத் தவிர டைனமைட்டையும் 1867-ம் ஆண்டு இவர் கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமையை அமெரிக்காவில் பெற்றார். இதையடுத்து 1875-ம் ஆண்டு பிளாஸ்டிக் ஜெலட்டினைக் கண்டுபிடித்தார்.

இதுபோன்ற நிறைய கண்டுபிடிப்புகள் மூலம் ஏராளமான பணத்தைச் சேர்த்தார். அத்துடன் சர்வதேச அளவில் 350 காப்புரிமைகளைப் பெற்றார். சுமார்  90 ஆயுதத் தொழிற்சாலைகளை நிறுவினார். இந்நிலையில் அழிவுக்கான வெடிமருந்தைக் கண்டுபிடித்த அவரை ‘மரணத்தின் வியாபாரி’ என்று அழைத்தனர். இதனால், மனம் கலங்கினார். தன்னை மக்கள் தூற்றுவார்கள் என எண்ணியதன் விளைவாகத் தனது சொத்துகள் அனைத்தையும் 1895-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி நோபல் பரிசுக்கான மூலதனமாக வழங்குவதாகத் தெரிவித்தார்.

அதன்படி தனது வாழ்நாளின் கடைசியில் சொத்துகளை அறக்கட்டளைக்கு வழங்குவதாக உயில் எழுதி வைத்தார். அத்துடன் தனது சொத்துகள்மூலம் கிடைக்கும்  வருவாயைக் கொண்டு வேதியியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளில் சிறந்த சேவை மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று அறிவித்தார். இத்தகைய சிறப்புவாய்ந்த நோபல் 1896-ம் ஆண்டு பெருமூளை இரத்தக்கசிவு காரணமாக மரணமடைந்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *