பாணந்துறையில் 4 கடைகள் தீக்கிரை! களத்துக்கு விரைந்தார் பைசர்!!

சுய நலன் கருதி அரசியல் செய்யாமல், தேசிய நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியலில் ஈடுபட  முன்வருமாறு அமைச்சர் பைஸர் முஸ்தபா, சகல தரப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  பாணந்துறை நகரின் பிரதான வீதியில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் (25) ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையானதையடுத்து, அமைச்சர் பைஸர் முஸ்தபா உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, நேரடியாக நிலைமைகளைக் கண்டறிந்தார்.

அங்கிருந்தோரிடம் இச்சம்பவம் தொடர்பிலான விபரங்களையும் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

அத்துடன், குறித்த சம்பவத்தின் பின்னணியில், “எது சரி… எது பிழை…”  என்பது தொடர்பில் ஆதாரபூர்வமான தகவல்களையும் பெற்று, தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அமைச்சர் பொலிஸாரிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,
இன்றைய கால கட்டத்தில், மக்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே சிறந்தது. இதை விட்டுவிட்டு, அரசியல் இலாபம் கருதி அல்லது காட்டிக்கொடுக்கும் நோக்குடன் சமூகங்களுக்கு மத்தியில் இவ்வாறான செயல்களை யாராவது செய்வார்களேயானால், அது மன்னிக்க முடியாத பாரிய குற்றமாகும் என நான் கருதுகிறேன்.

எனவே, குறுகிய நோக்கங்களை மனதிலிருந்து அகற்றி, தேசிய நல்லிணக்கத்திற்காக சாதி, சமய, கட்சி பேதங்களை மறந்து  அனைவரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும். அத்துடன், கட்சி பேதங்களை மறந்து நாட்டைக் கட்டியெழுப்பவும் முன்வர வேண்டும்  என்றார்.

இதேவேளை, முஸ்லிம்களுக்குச்  சொந்தமான நான்கு கடைகள் முற்றிலும் தீக்கிரையானதையடுத்து, பெரும்பான்மை இனத்தவரின் அருகாமையில் இருந்த கடையொன்றும் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *