மைத்திரி – மஹிந்தவின் ஆட்டத்துக்கு தக்க பாடம் புகட்டும் சர்வதேச சமூகம்! – அடித்துக் கூறுகின்றார் சம்பந்தன்

“ஜனநாயக விழுமியங்களை மதிக்காமல் – அதியுயர் சபையான நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை ஏற்காமல் – அரசமைப்பு சட்டங்களை மீறி படுகேவலமாக தற்போது ஆட்சி செய்யும் மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு சர்வதேச சமூகம் தக்க பாடம் புகட்டும். அதற்குரிய நேரமும் வந்து விட்டது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கையின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலஞ்சமும் ஊழலும் சர்வாதிகாரமும் ஒரு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்க முடியாது. இந்த மூன்றுக்கும் பெயர் போன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்து அராஜக முறையில் செயற்படுகின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இது படுகேவலமானது. பதவி ஆசையால் நாட்டை இவர்கள் சீரழித்துக்கொண்டிருக்கின்றார்கள். நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறி நிலைக்கு வந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் படுதோல்வியடைந்து எதிரணி வரிசையில் அமர்ந்திருந்த மஹிந்தவுக்கு எந்த அடிப்படையில் பிரதமர் பதவியை ஜனாதிபதி மைத்திரி வழங்கினார் என்பது இன்னமும் எமக்குப் புரியவே இல்லை.

சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று வாக்குறுதி வழங்கி நாட்டு மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக வந்த மைத்திரி, இன்று மாபெரும் துரோகமிழைத்துள்ளார். கடந்த மாதம் 26ஆம் திகதி தொடக்கம் இன்று வரை தான் செய்த – செய்கின்ற செய்லகளை அவர் நியாயப்படுத்த முற்படுகின்றார். இதற்கு காலம் பதில் சொல்லியே தீரும்.

ஜனநாயக விழுமியங்களை மதிக்காமல் – அதியுயர் சபையான நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை ஏற்காமல் – அரசமைப்பு சட்டங்களை மீறி படுகேவலமாக தற்போது ஆட்சி செய்யும் மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு சர்வதேச சமூகம் தக்க பாடம் புகட்டும். அதற்குரிய நேரமும் வந்து விட்டது.

அதேவேளை, நீதித்துறையும் இந்த அராஜக ஆட்சிக்கு உரிய தீர்ப்பை விரைவில் வழங்கும். இது உறுதி” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *