சர்வாதிகாரி கோட்டாபயவை விரட்ட சஜித்துக்கு வாக்கிடுக! – தமிழர் தலைநகர் திருமலையில் தலைவர் சம்பந்தன் அறைகூவல்

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரியாவார். அவரைத் தோற்கடிக்க எதிர்வரும் 16ஆம் திகதி 95 சதவீதமான தமிழ் மக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து திருகோணமலை கலாசார மண்டபத்தில் நேற்றுப் பரப்புரைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பலர் எதைச் சொன்னாலும் எமது மக்களின் பிரச்சினையைத் தீர்க்க அர்ப்பணிப்புடன் பல தசாப்தங்களாக அயராது செயற்பட்டு வருகின்றோம். எதிர்காலத்திலும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய ஒருவரையே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யவேண்டும்.

தற்போது போட்டியிடுபவர்களில் சஜித் பிரேமதாஸ ஒருமித்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான அரசமைப்பு மாற்றத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச முற்றிலும் சிங்கள மக்களின் வாக்கிலே வெல்வேன் எனக் கூறி வருகின்றார். கோட்டாபயவின் இந்த நிலைப்பாடு தமிழ் மக்களின் நீண்டநாள் போராட்டத்துக்குத் தீர்வைத் தராது என்பது மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் பொருந்தாதாது.

கோட்டாபய கடந்த காலங்களில் ஒரு சர்வாதிகாரியாகச் செயற்பட்டவர். எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படத்தியவர். நாம் நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தி வருவது எமது உரிமைக்காகவே. அதைவிடுத்து அவரிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது.

மூதூரில் நடந்த 17 பணியாளர்களின் படுகொலைக்கு யார் பொறுப்பு? அதற்கு வழங்கப்பட்ட தீர்வு என்ன? திருகோணமலையில் நடந்த 5 மாணவர்கள் படுகொலை யார் காலத்தில் நடந்தது? அதற்கு ராஜபக்சவினர் வழங்கிய தீர்வு என்ன?

இவ்வாறிருக்கையில் சின்னப் பொடியனான நாமல் ராஜபக்ச வடக்கு, கிழக்கில் கிராமம் தோறும் சென்று வெட்கம் இல்லாமல் வாக்குக் கேட்கின்றார்.

இந்த விடயங்களைக் கருத்தில்கொண்டு எமது பிரச்சினைகளைச் சுதந்திரமாக பேசவல்ல சஜித்துக்கு 95 வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். நீங்கள் நிராகரிக்க நினைக்கும் ஒவ்வொரு வாக்கும் கோட்டாபயவுக்கே சேரும். அதைக் கருத்தில்கொண்டு அனைத்துத் தமிழ் மக்களும் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *