புலிகளை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்கியதுபோல் இப்போதும் நேசக்கரம் நீட்டுங்கள் – மஹிந்த கோரிக்கை!
பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நாட்டை கட்டியெழுப்புவதற்காக, யுத்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று தம்ககு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்தார்.
அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து இன்று விசேட உரைநிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
” 2006ஆ ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் மீள ஆரம்பமானபோது எவ்வாறு நாட்டுமக்கள் அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினார்களோ அதேபோன்று தற்போதும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் .
தற்போது பிரச்சனை பாராளுமன்றத்திலேயே காணப்படுகின்றது. அதனால் அதற்கு தீர்லை காணும்வகையில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டிய எவ்விதத் தேவையும் இல்லை. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சியும் தெளிவான பெரும்பான்மையைப் பெறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 96 ஆசனங்களைப் பெற்றது.
இரு கட்சிகளுக்கும் இடையில் 10 ஆசனங்களே வித்தியாசப்பட்டன. இதன்காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்றுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டது.
கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழு அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது. அதன்பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களும் எம்முடன் இணைந்துகொண்டனர். எனவே, இன்று பாராளுமன்றத்தில் உள்ள மிகப்பெரிய பாராளுமன்றக் குழுவுக்கே நான் தலைமைத்துவம் வழங்குகிறேன் என்றும் பிதைமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
1994, 2001, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் பின்னர் ஜனாதிபதியாக இருந்த டி.பி. விஜேதுங்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் அதிகூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவையே அரசாங்கத்தை அமைக்க அழைத்தனர் என்று குறிப்பிட்ட பிரதமர்
1994 ஆம் ஆண்டு பொது ஜன முன்னணியும் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியும் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் ஆட்சி அமைத்தன. தற்போது உயர்நீதிமன்ற நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தல் நிறைவடையும் வரையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மாத்திரமே கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த முயற்சியில் தவறிழைக்கப்பட்டால் கிரேக்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே எமது நாட்டிற்கும் ஏற்படும். நாட்டில் தற்போது பொருளாதாரம் பின்னடைகை;கண்டுள்ளது. பெரும் இக்கட்டான நிலைக்கு உள்ளாகியுள்ளது. இதனை நாட்டு மக்கள் கவனத்தில்கொள்ளவேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்கள் மீது அதிக வரியை சுமத்தி அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து வெளிநாட்டு பயணங்களுக்கு அதிக பணத்தை செலவு செய்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் அதிகாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியுமான வகையில் குறிப்பிடத்தக்க அமைச்சர்களை நாம் நியமிப்போம். அதனை நான் முன்கூட்டியே கூறுகின்றேன். இவை அனைத்துக்கும் முன்பாக நாட்டில் நிலையான அரசாங்கமொன்று இருக்க வேண்டும். அந்த புதிய அரசாங்கத்தில் செலவுகளைக் குறைப்பதற்கு இயன்றளவு நடவடிக்கைகளை எடுப்பேன். மூடிஸ் நிறுவனத்தினால் எமது கடன் தரப்படுத்தலில் குறைந்த மட்டத்தில் உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் அரசாங்கத்தை கையளிக்கும்போது அவையனைத்தும் தரப்படுத்தலில் உயர்மட்டத்திலேயே காணப்பட்டன. 2015 ஆம் ஆண்டின் பின்னரே அது வீழ்ச்சியடைந்தது. இந்தத் தரப்படுத்தல் அரசியல் என்றே கூற வேண்டும்.
வர்த்தகசந்தை தொடர்பில் எமக்கு இருந்த நம்பிக்கை காரணமாக நாம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. அவ்வாறான சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதினாலேயே ஜனாதிபதி நாட்டை எம்மிடம் கையளித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இது குறித்து தெரியும் என்பதினாலேயே தினமும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தூதுவர்களை அழைத்து பொதுத் தேர்தலை நடாத்துவது ஜனநாயக விரோதமான செயற்பாடு என சர்வதேசத்திற்கு பிரசாரம் செய்கின்றனர்.
பொதுத் தேர்தல் நடைபெற்று எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்என்பது அவர்களுக்குத் தெரியும். ஜனாதிபதியும் நாமும் இணைந்து உருவாக்கும் அரசாங்கம் மிகவும் பலம் வாய்ந்தது. அது மக்கள் சார்ந்த அரசாங்கம் என்பதை கூறுகின்றேன். நாட்டின் ஸ்திரத் தன்மையை உருவாக்குவதற்காக நடத்த இருந்த பொதுத்தேர்தல் பிற்போட்டுள்ளமையால் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை உருவாக்க சிறிது காலம் செல்லும்.
ஆகவே, இந்த காலத்தில் எம்முடன் இந்த நாட்டை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களுக்கு கூறிக்கொள்ளுகின்றேன்.